தேனி அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் 4 பேர் காயம் சாலை மூடப்பட்டது
தேனி அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இரு விபத்துகளில் 4 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து சாலை மூடப்பட்டது.
தேனி:
திண்டுக்கல்-குமுளி இருவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் இந்த சாலை அமைக்கும் பணிகள் முடிவடையும் முன்பே ஆங்காங்கே சாலை திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால், வாகனங்கள் இந்த புதிய சாலையில் அசுர வேகத்தில் பயணிக்கின்றன.
தேனி அருகே ஆர்.எம்.டி.சி. நகரில் இந்த புதிய சாலையும், தேனி-போடி சாலையும் சந்திக்கும் இடத்தில் தொடர் விபத்துகள் நடந்து வருகின்றன. கடந்த 10 நாட்களில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற மாவட்ட கலெக்டர் முரளிதரன், காயம்அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.
சாலை மூடல்
இந்நிலையில், நேற்று காலையில் இந்த சாலை சந்திப்பில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பூமலைக்குண்டுவை சேர்ந்த கருப்பையா (வயது 32) காயம் அடைந்தார். இந்த விபத்து நடந்த சிறிது நேரத்தில் அதே இடத்தில், மதுரையில் இருந்து போடி நோக்கி சென்ற காரும், கம்பத்தில் இருந்து வாழையாத்துப்பட்டி நோக்கி வந்த ஜீப்பும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. ஜீப் சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த போடியை சேர்ந்த குமணன்முத்து, அவருடைய மனைவி இந்திரா, ஜீப்பை ஓட்டி வந்த குமார் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்துக்கு தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ், பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலா ஆகியோர் வந்து பார்வையிட்டனர். தொடர் விபத்துகள் நடந்ததை தொடர்ந்து புதிய சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மண்ணை கொட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை இந்த சாலை மூடப்பட்டு வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story