வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 21 Jun 2021 5:42 PM GMT (Updated: 21 Jun 2021 5:42 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம், 

தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் அரிசியை சிலர், பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி அதனை கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு கடத்திச்சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதுதொடர்பாக வந்த புகார்களின்பேரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் இயக்குனர் ஆபாஷ்குமார் உத்தரவின்பேரில் சென்னை மண்டல போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான்சுந்தர் ஆகியோரின் மேற்பார்வையில் விழுப்புரம் இன்ஸ்பெக்டர் கல்பனா தலைமையிலான போலீசார், கடந்த சில நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்துப்பணி மற்றும் வாகன தணிக்கையை மேற்கொண்டனர். இதில் வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற 25 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

14 பேர் கைது 

மேலும் இந்த அரிசி கடத்தலில் ஈடுபட்ட காஞ்சீபுரத்தை சேர்ந்த முரளி (வயது 38), மணிகண்டன் (28), கலீல்ரகுமான் (50), விழுப்புரம் பகுதியை சேர்ந்த ஷாகுல்அமீது (35), ஜாபர்சேட் (28), வேல்முருகன் (32) உள்ளிட்ட 14 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததோடு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கன்டெய்னர் லாரி, ஒரு ஆட்டோ, 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். மேலும் இதுபோன்று ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Next Story