கோவில் வளாகத்தில் உடல் கருகிய நிலையில் மூதாட்டி பிணம்
திருக்கோவிலூரில் கோவில் வளாகத்தில் மூதாட்டி ஒருவர் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். அவர் எரித்துகொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
திருக்கோவிலூர்
தொழிலாளி மனைவி
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வெள்ளைப் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகு. இவர் சென்னை ஆவடியில் கூலி வேலை செய்து வருகிறார். இதனால் அவரது மனைவி பாக்கியவதி(வயது 63) வீட்டில் தனியாக வசித்து வந்தார். பாக்கியவதி தினமும் காலையில் திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ. நகரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்புவது வழக்கம். அதே போல் நேற்று முன்தினம் மகள் வீட்டுக்கு சென்ற பாக்கியவதி இரவு 9 மணி அளவில் வீட்டுக்கு செல்வதாக மகளிடம் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். ஆனால் அவர் வீட்டுக்கு வந்து சேரவில்லை. இதனால் இரவு அவரது மகள் வீ்ட்டிலேயே தங்கி இருப்பார் என அக்கம் பக்கத்தினர் கருதினர்.
கோவில் வளாகத்தில் மூதாட்டிபிணம்
இந்த நிலையில் நேற்று காலை திருக்கோவிலூர் ஆஸ்பத்திரி சாலையில் உள்ள முருகன் கோவில் வளாகத்தில் உடல் கருகிய நிலையில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியதால் அங்கு பெரும் கூட்டம் கூடியது. ஆனால் உடல் கருகி இருந்தததால் இறந்து கிடந்த பெண் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.
போலீஸ் சூப்பிரண்டு விரைந்தார்
இதுபற்றிய தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன் அகிலன், திருமால், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த பெண் குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
போலீசார் விசாரணை
போலீசாரின் தீவிர விசாரணைக்கு பிறகு இறந்து கிடந்த பெண் பாக்கியவதி என்பது தெரியவந்தது. முந்தையநாள் இரவு மகள் வீ்ட்டில் இருந்து தனது வீட்டுக்கு செல்வதாக கூறி சென்ற பாக்கியவதி கோவில் முன்பு எரிந்த நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் தனது தாயின் சாவில் சந்தேகம் இருப்பதாக பாக்கியவதியின் மகன் இளங்கோவன் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாக்கியவதியை யாரேனும் எரித்து கொலை செய்தார்களா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் வளாகத்தில் எரிந்த நிலையில் பெண் பிணமாக கிடந்த சம்பவத்தால் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story