கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Published on

பென்னாகரம்:

கனமழை

தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தீவிரமடைந்து உள்ளது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்த நிலையில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 5,400 கனஅடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 10 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கொள்ளேகாலை வந்தடைந்தது. நாளை மாலைக்குள் ஒகேனக்கல்லை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com