ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி மையத்தை பொதுமக்கள் முற்றுகை
ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் தடுப்பூசி மையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் தடுப்பூசி மையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா தடுப்பூசி
நீலகிரி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் முன்னுரிமை அடிப்படையில் பழங்குடியின மக்கள், தோட்ட தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு போடப்பட்டு வருகிறது. நீலகிரிக்கு ஒதுக்கப்படும் தடுப்பூசி பிரித்து அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் நேற்று ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இதுகுறித்து தகவலறிந்த ஏராளமான பொதுமக்கள் காலை முதலே மையத்துக்கு வருகை தந்தனர்.
நீண்ட வரிசையில் காத்திருந்தனர்
அவர்கள் தடுப்பூசி போடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மக்கள் கூட்டம் அதிகரித்ததால் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கேள்விக்குறியானது.
இதற்கிடையில் நர்சுகள் இன்றைக்கு 100 டோஸ் மட்டுமே செலுத்தப்படும் என்று தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து டோக்கன் வழங்காமல் ஆதார் அடையாள அட்டை நகலை பெற்று தடுப்பூசி போடப்பட்டது.
இந்த நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் காலை முதலே காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 3 மணி நேரம் காத்திருந்தும், 30 பேருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தி உள்ளாக கூறி நர்சுகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை போராட்டம்
இதற்கு நர்சுகள் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தடுப்பூசி மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரசு ஆஸ்பத்திரி இருப்பிட அதிகாரி டாக்டர் ரவிசங்கர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள், காலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருக்கிறோம். ஆனால், பின் வழியாக வந்த பலருக்கு தடுப்பூசி செலுத்தியதால் எங்களுக்கு செலுத்தப்பட வில்லை என்று கூறினர்.
அதற்கு அவர் முதல் டோஸ் 27 பேர், 2-வது டோஸ் 53 பேர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு செலுத்தப்பட்டது. தடுப்பூசி கிடைத்த பின்னர் செலுத்தப்படும் என்று கூறி சமாதானம் செய்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முறையான தகவல்
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 2-வது டோஸ் செலுத்த 90 நாட்களை கடந்தும் நாங்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் முதலில் வருபவர்களுக்கு டோக்கன் வினியோகித்து கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை.
மேலும் மறைமுகமாக பலருக்கு போடப்படுகிறது. இதனால் தடுப்பூசி போட முடியாமல் அவதி அடைந்து உள்ளோம். எனவே, கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து முறையான தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story