கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி


கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி
x
தினத்தந்தி 22 Jun 2021 12:19 AM IST (Updated: 22 Jun 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியாவில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. அதை கலெக்டர் சமீரன் ஆய்வு செய்தார்.

கோவை

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியாவில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. அதை கலெக்டர் சமீரன் ஆய்வு செய்தார்.

யோகா பயிற்சி 

கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. யோகா பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களின் சுவாசம் சீராக இருக்கும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிப்பதுடன், உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. 

உலகம் முழுவதும் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, கொடிசியா கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள சித்த மருத்துவ சிகிச்சை பிரிவில் உள்ளவர்களுக்கு திறந்த வெளியில் வைத்து யோகா பயிற்சி வழங்கப்பட்டது. 

கலெக்டர் ஆய்வு 

இதனை கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பு உடை அணிந்த (பி.பி.கிட்) 2 யோகா பயிற்றுனர்கள், அங்கிருந்த கொரோனா நோயாளிகளுக்கு மூச்சு பயிற்சியுடன், பல்வேறு யோகாசனங்களை கற்றுக்கொடுத்தனர்.

மேலும் அவர்களுக்கு தியான பயிற்சியும் வழங்கப்பட்டது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்னரும் யோகா பயிற்சி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டனர். இதன் பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

ஒத்துழைப்பு

கடந்த மாதங்களில் இருந்த கொரோனா பாதிப்பைவிட தற்போது குறைந்து உள்ளது. இதற்கு கோவை மாவட்ட பொதுமக்களின் ஒத்துழைப்பு முக்கிய காரணமாகும். 

பொது மக்கள் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில்செல்லும் போது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

கொரோனா தொற்றை முழுவதுமாக நம் கோவை மாவட்டத்தில் இருந்து ஒழிப்புதற்கு பொதுமக்கள் முழுஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story