கூட்டுறவு வங்கியில் ரூ.1 கோடி வரை முறைகேடு


கூட்டுறவு வங்கியில் ரூ.1 கோடி வரை முறைகேடு
x
தினத்தந்தி 21 Jun 2021 7:10 PM GMT (Updated: 2021-06-22T00:40:17+05:30)

கூட்டுறவு வங்கியில் ரூ.1 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. இதையடுத்து அந்த வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்

நொய்யல்
கூட்டுறவு வங்கியில் விவசாய கடன்
கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி புங்கோடை குளத்துப்பாளையத்தில் வேட்டமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சங்க உறுப்பினர்களாக உள்ளனர். இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு பின் புதிய ஆட்சியில் கூட்டுறவு வங்கியில் 5 பவுனுக்கு கீழ் உள்ள நகைக்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன் காரணமாக கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஏராளமானோர் இந்த கூட்டுறவு சங்கத்தில் 5 பவுன் நகைகளை வைத்து விவசாய கடன் பெற்றுள்ளனர்.
அறிவிப்பு இல்லை
 அப்போது கூட்டுறவு வங்கி நிர்வாகத்தினர் தற்போது பணம் கையிருப்பில் இல்லை, பணம் வந்தவுடன் அனைவரின் வங்கி கணக்கிற்கும் அனுப்பி வைக்கப்படும் என்று கூறி நகைகளை பெற்றுக் கொண்டு ரசீது அளித்தனர். இந்நிலையில் தேர்தல் அறிவிப்பு, ஓட்டு எண்ணிக்கை, கொரோனா ஊரடங்கு ஆகியவற்றை காரணம்காட்டி நகை கடன் பெற்றவர்களுக்கு இதுவரை பணம் வழங்கப்படவில்லை. மேலும் தி.மு.க. ஆட்சியில் நகைக்கடன் தள்ளுபடி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்பட இல்லை.
வாக்குவாதம்-முற்றுகை
 இதனால் ஏமாற்றமடைந்த சிலர் கடந்த சில நாட்களாக வங்கிக்கு சென்று தங்களுக்கு கடன்தொகை வேண்டும் அல்லது அடமானம் வைத்த நகைகளை திருப்பி தர வேண்டும் என்று கேட்டனர். அதற்கு அங்கிருந்த பணியாளர்கள் அனைவருக்கும் கடன்தொகை ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாகவும், எனவே கடனை கட்டி நகைகளை மீட்டு கொள்ளுமாறு கூறினர். 
இதுகுறித்து தகவல் பரவியதால் வங்கியில் வரவு, செலவு வைத்துள்ள பொதுமக்கள் நேற்று காலை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு அங்கிருந்த பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்தனர். 
இது குறித்து தகவல் அறிந்த கூட்டுறவு சங்கங்களின் துணை சார்பதிவாளர் பாஸ்கர் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
ரூ.1 கோடி முறைகேடு
பின்னர் அந்த வங்கியில் இருந்த ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் நகைக்கடனுக்கான பணம் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது போல் போலி கணக்கு எழுதியுள்ளது, நகையின் எடையை குறைத்து எழுதியுள்ளது, பணம் டெபாசிட் செய்தவர்களின் பாஸ்புக்கில் உள்ள தொகையை விட வங்கி கணக்கில் குறைவான தொகை இருப்பது, பாஸ்புக்கில் உள்ளது போன்ற சேமிப்பு கணக்கு இல்லாதது, என்று ரூ.1 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது.

Next Story