ஆடுகளை திருடிய வாலிபர் கைது


ஆடுகளை திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Jun 2021 7:10 PM GMT (Updated: 2021-06-22T00:40:21+05:30)

பொள்ளாச்சி அருகே ஆடுகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே ஆடுகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆடுகள் திருட்டு

பொள்ளாச்சி அருகே உள்ள மாப்பிள்ளைகவுண்டன்புதூரை சேர்ந்தவர் மணிகண்டசாமி (வயது 42), விவசாயி. இவர் அதே பகுதியில் ஆடு, மாடுகள் வளர்ப்பு மற்றும் விவசாய தொழில் செய்து வருகிறார். 

இந்த நிலையில் இவர் கடந்த 19-ந் தேதி ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். பின்னர் வழக்கம் போல் தான் வளர்க்கும் 2 மாடுகளையும், 7 ஆடு களையும் பட்டியில் அடைத்து வைத்தார். 

மறுநாள் காலை பட்டிக்கு சென்றபோது, அதில் 2 ஆடுகளை காணவில்லை. அந்த பகுதி முழுவதும் தேடி பார்த்தும் ஆடுகள் கிடைக்கவில்லை. அதை மர்ம ஆசாமிகள் திருடியது தெரியவந்தது. 

போலீசார் விசாரணை 

இதையடுத்து அவர் வடக்கிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

 அத்துடன் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.  அதில் 3 பேர் அந்த ஆடுகளை திருடி செல்வது தெரியவந்தது. 

இதை யடுத்து போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் வடக்கிபாளையம் அருகே ரோட்டோரத்தில் நின்று கொண்டிருந்த நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

வாலிபர் கைது 

விசாரணையில் சூலூரை சேர்ந்த கார்த்திக் (25) என்பதும், அவர் தனது கூட்டாளிகளான சரவணன், முருகன் ஆகியோருடன் சேர்ந்து ஆடுகளை திருடியதும் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் கார்த்திக்கை கைது செய்து, அவரிடம் இருந்து  2 ஆடுகளை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாகி உள்ள கூட்டாளிகள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story