தடுப்புகளை அகற்றக்கோரி அதிகாரியிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
தடுப்புகளை அகற்றக்கோரி அதிகாரியிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.
குன்னூர்
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காந்திபுரம் கிராமம் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கிராமத்தில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து காந்திபுரம் கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்த நிலையில் கிராமத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்றின் பாதிப்பு இல்லாமல் இருந்தது. காந்திபுரம் கிராம மக்கள் கடத்த 17 நாட்களாக தனிமை படுத்தப்பட்டு இருந்ததால், வருமானமின்றி தவித்து வந்தனர்.
இதற்கிடையில், நகராட்சி அதிகாரி ஒருவர் ஆய்வு செய்ய காந்திபுரம் கிராமத்திற்கு வந்தார். அப்போது அவரிடம், பொதுமக்கள் தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறி வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் உள்ளவர்கள் வெளியிடங்களுக்கு பணிக்கு சென்றுவரலாம் என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story