வாணியம்பாடியில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 10 லட்சம் நகை, பணம் திருட்டு


வாணியம்பாடியில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 10 லட்சம் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 22 Jun 2021 5:04 PM GMT (Updated: 2021-06-22T22:34:37+05:30)

வாணியம்பாடியில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை திருடிய மர்ம நபர்கள், ஆம்லெட் போட்டு சாப்பிட்டு விட்டு சென்றுள்ளனர்.

வாணியம்பாடி

நகை, பணம் திருட்டு

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியில் வசித்து வருபவர் வசீம் அக்ரம் (வயது 40).   நிதி உதவி பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர் இரவு அங்கேயே தன்னுடைய மாமியார் வீட்டில் தங்கி உள்ளார். 

இந்தநிலையில் நேற்று மாலை 4 மணிக்கு குடும்பத்துடன் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டிற்குள் சென்றபோது  வீட்டின் அறைகளில் இருந்த பீரோக்கள் திறந்த நிலையிலும், பொருட்கள் சிதறியும் கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை பார்த்தபோது அதில் வைத்திருந்த 25 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. 

ஆம்லெட் போட்டு சாப்பிட்டனர்

மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆசிரியர் வசீம் அக்ரம் கொடுத்த புகாரின் பேரில், வாணியம்பாடி  துணை போலீஸ் சூபபிரண்டு பழனிசெல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை சேகரித்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

நகை, பணத்தை திருடிய மர்ம நபர்கள் சமையலறைக்கு சென்று, அங்கிருந்த முட்டைகளை எடுத்து ஆம்லெட் போட்டு சாப்பிட்டு விட்டு, பின்னர் குக்கரில் வைத்திருந்த பாலை காய்ச்சி குடித்து விட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story