போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு குடும்பத்துடன் மூதாட்டி உண்ணாவிரத போராட்டம்


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு குடும்பத்துடன் மூதாட்டி உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2021 5:25 PM GMT (Updated: 2021-06-22T22:55:47+05:30)

கடைகள் இடிக்கப்பட்டதை கண்டித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு குடும்பத்துடன் மூதாட்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

உண்ணாவிரத போராட்டம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 77). இவர் தனது மகன்கள் மற்றும் குடும்பத்துடன் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது சரஸ்வதி கூறியதாவது:-

கடைகள் இடிப்பு

எனது மகன்கள் ரமேஷ், பூபாலன் ஆகியோர் பேரணாம்பட்டு மெயின்ரோட்டில் மளிகை, அடகுக் கடை வைத்திருந்தனர். பல ஆண்டுகளாக அங்கு கடை வைத்து வாழ்ந்து வருகிறோம். கடை அமைந்துள்ளது கோவில் இடம். எனவே வாடகை முறையாக செலுத்தி வந்தோம். இந்த நிலையில் கோவில் நிர்வாகி ஒருவர் கடைக்கு வாடகை உயர்த்தினார். தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் எங்களால் அதைசெலுத்த முடியவில்லை என்று கூறினோம். ஆனால் அந்த நிர்வாகி கடைக்கு வாடகை செலுத்தாவிட்டால் கடை நடத்த முடியாது என்று கூறினார். 

மேலும் சில நாட்களுக்கு முன்பு கடைகளுக்கு பூட்டு போட்டுவிட்டு சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென பொக்லைன் எந்திரத்தை வைத்து கடையை இடித்து விட்டார். கடையில் இருந்த பொருட்கள் சேதமானது. சில பொருட்களை அங்கிருந்தவர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். இதனால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

Next Story