மின்னல் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி
விழுப்புரம் மாவட்டத்தில் காற்றுடன் பரவலாக மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார். கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
விழுப்புரம்,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது.
விழுப்புரம் நகர பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11.15 மணியளவில் திடீரென சாரல் மழை பெய்தது. அடுத்த சில நிமிடங்களில் பலத்த காற்றுடனும், இடி- மின்னலுடனும் கூடிய பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் அரை மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. அதன் பிறகு சிறிது நேரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் நள்ளிரவில் பெய்யத்தொடங்கிய மழை நேற்று அதிகாலை வரை விட்டு விட்டு தூறிக்கொண்டே இருந்தது.
தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். உடனே நேற்று காலை நகராட்சி ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
இதேபோல் விழுப்புரம் சுற்றுவட்டார கிராமங்களான கோலியனூர், காணை, வளவனூர், பெரும்பாக்கம், தோகைப்பாடி, சிந்தாமணி, அய்யூர்அகரம், பிடாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. கிழக்கு சண்முகபுரம் காலனி பகுதியில் உள்ள மின் கம்பி மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. இதனால் மின் கம்பி அறுந்து விழுந்ததால் அப்பகுதியில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். பின்னர் நேற்று காலை மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று அறுந்து கிடந்த மின் கம்பியை சரிசெய்தனர். அதன் பிறகு மாலையில் மீண்டும் மின் வினியோகம் சீரானது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
மேலும் விக்கிரவாண்டி, செஞ்சி, திண்டிவனம், வானூர், மரக்காணம், கோட்டக்குப்பம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு பரவலாக மழை பெய்தது. கடந்த சில மாதங்களாக வெப்பத்தின் தாக்கத்தினால் மிகவும் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள், நேற்று முன்தினம் இரவு பெய்த இந்த மழையினால் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
இதனிடையே இந்த மழையின்போது மின்னல் தாக்கியதில் வாலிபர் ஒருவர் இறந்தார். அதன் விவரம் வருமாறு:-
மின்னல் தாக்கி பலி
திண்டிவனம் டி.எம்.ஜெ. நகரை சேர்ந்த நடராஜன் மகன் சிவா (வயது 23). இவர் கடலூரில் உள்ள தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் திண்டிவனத்தில் இருந்து கடலூருக்கு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் அவர் கடலூரில் இருந்து திண்டிவனத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
புதுச்சேரி- திண்டிவனம் சாலையில் கீழ்கூத்தப்பாக்கம் என்ற இடத்தில் வரும்போது திடீரென இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சிவா மீது மின்னல் தாக்கியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் கிளியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story