திருவண்ணாமலை; கந்துவட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை; சாலை மறியல்
திருவண்ணாமலையில் கந்துவட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் கந்துவட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயி
திருவண்ணாமலை அருேக உள்ள சின்னபாலியப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமஜெயம் (வயது 48), விவசாயி. மேலும் இவர், செங்கல் சூளை மற்றும் லாரியை வாடகைக்கு விடும் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர், கடந்த 2018-ம் ஆண்டு கோட்டாங்கல் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கந்துவட்டிக்கு ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அவருக்கு ராமஜெயம் வட்டி பணமாக மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக அவரால் வட்டி கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும், வட்டிக்கு மேல் வட்டி சேர்ந்து கடன் தொகை அதிகரித்து விட்டதாக கூறி கடன் கொடுத்த நபர் ராமஜெயத்திடம் மிரட்டி அவரது வீட்டுடன் கூடிய 95 சென்ட் நிலத்தை எழுதி வாங்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தற்கொலை
இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கடன் கொடுத்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பின்னர் அந்த நபர் கிரையம் செய்து கொண்ட நிலத்தின் பத்திரத்தை கொடுத்து விடுவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ராமஜெயம் தற்கொலை செய்து கொண்ட தகவலை போலீசாருக்கு தெரிவிக்கவில்லை. நேற்று காலை 9 மணி வரை கடன் கொடுத்த நபர் சின்னபாலியப்பட்டு வந்து பத்திரத்தை கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராமஜெயத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது பிணத்தை செங்கம் பைபாஸ் சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படாததால் அவர்கள் கந்துவட்டிக்கு பணம் கொடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி, உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story