பிறந்த குழந்தையை பார்க்க முடியாமல் கொரோனா தொற்றால் பலியான வாலிபர்


பிறந்த குழந்தையை பார்க்க முடியாமல் கொரோனா தொற்றால் பலியான வாலிபர்
x
தினத்தந்தி 22 Jun 2021 5:52 PM GMT (Updated: 2021-06-22T23:22:57+05:30)

ராமநாதபுரம் அருகே பிறந்த குழந்தையை பார்க்க முடியாமல் கொரோனா தொற்றால் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம்,ஜூன்.
ராமநாதபுரம் அருகே பிறந்த குழந்தையை பார்க்க முடியாமல் கொரோனா தொற்றால் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2-வது குழந்தை
ராமநாதபுரம் அருகே உள்ள கவரங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராமையா என்பவரது மகன் கோகுல்நாத் (வயது 32). விவசாயம் செய்து வந்தார். 
இவருக்கும், பாப்பாக்குடியை சேர்ந்த ராதிகா என்பவருக்கும் திருமணமாகி 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் 2-வதாக கர்ப்பமான ராதிகா பிரசவத்துக்காக பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனிடையே கோகுல்நாத்தின் தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் அருகில் இருந்து கவனித்து வந்துள்ளார். 
இதில் தந்தை குணமடைந்த நிலையில் கோகுல்நாத்திற்கு தொற்று ஏற்பட்டது. இதனால் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியிலும், பின்னர் தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டார். 
பலி
இதனிடையே அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குணமடைந்த பின்னர் குழந்தையை பார்க்க செல்ல வேண்டும் என்ற ஆவலில் இருந்த கோகுல்நாத் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக பலியானார். கொரோனா தொற்றால் பலியானதால் அவரின் உடல் உரிய முறைப்படி ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. பச்சிளங்குழந்தையுடன் இருந்ததால் கோகுல்நாத்தின் உடலை அவரது மனைவி மற்றும் குழந்தை பார்க்க அனுமதிக்கவில்லை. பிறந்த குழந்தையை பார்க்காமல் தந்தை இறந்ததும், தந்தையை பார்க்காமல் பச்சிளங்குழந்தை அறியாமல் அழுததும் காண்பவர் மனதை கலங்க செய்தது.

Next Story