39 வயதுக்கு குறைவான 38 பேர் கொரோனாவுக்கு பலி-சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களில் 38 பேர் 39 வயதுக்கும் குறைவானவர்கள் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்:
383 பேர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மட்டும் இன்றி, பலி எண்ணிக்கையும் அதிகரித்தவாறே இருந்து வருகிறது. கொரோனாவின் முதல் அலையில் வயது முதிர்ந்தவர்களே அதிக அளவில் இறந்தனர். ஆனால் 2-வது அலை வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் தாக்கி வருவதோடு, குறைவான வயதுடையோர் அதிக அளவில் இறப்பதும் கவலை அளிப்பதாக உள்ளது.
சுகாதாரத்துறை அறிவிப்பின் படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 383 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 263 பேர் ஆண்கள், 120 பேர் பெண்கள் ஆவர்.
10 வயது முதல்
இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 383 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 38 பேர் 10 வயது முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். 126 பேர் 40 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள். மீதமுள்ள 219 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
கொரோனாவின் 2-வது அலை அனைத்து தரப்பினரையும் தாக்கி வருவதால் பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கொல்லிமலையில் ஒருவர் பலி
ஒன்றியங்களை பொறுத்த வரையில், அதிகபட்சமாக பள்ளிபாளையத்தில் 83 பேரும், குறைந்தபட்சமாக கொல்லிமலையில் ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக இறந்தவர்களின் எண்ணிக்கை வருமாறு:-
பள்ளிபாளையம்-83, நாமக்கல்-57, ராசிபுரம்-43, திருச்செங்கோடு-38, நாமகிரிப்பேட்டை-28, எருமப்பட்டி-25, மோகனூர்-19, வெண்ணந்தூர்-19, பரமத்தி-15, சேந்தமங்கலம்-15, எலச்சிபாளையம்-11, கபிலர்மலை-10, புதுச்சத்திரம்-10, மல்லசமுத்திரம்-9, கொல்லிமலை-1.
Related Tags :
Next Story