மணமக்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
சமூக இடைவெளியின்றி திருமணம் நடத்திய மணமக்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கன்னியப்பபிள்ளைப்பட்டி, மொட்டனூத்து, ஒக்கரைப்பட்டி, மரிக்குண்டு, ஜி.உசிலம்பட்டி ஆகிய ஊர்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தார்ச்சாலை பலப்படுத்துதல், நாடக மேடை கட்டுதல், வரத்து வாய்க்கால் மேம்படுத்துதல், அங்கன்வாடி மையம் கட்டுதல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுதல், புதிய பயணிகள் நிழற்குடை அமைத்தல், கழிப்பிடம் கட்டுதல் போன்ற பல்வேறு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
இதேபோல் மொட்டனூத்து ஊராட்சியில் காய்ச்சல் கண்டறியும் முகாம், கொம்பையன்பட்டி ரேஷன் கடையில் கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கும் பணி ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.
ஒக்கரைப்பட்டியில் கலெக்டர் ஆய்வு செய்த போது, அங்கு ஒரு வீட்டில் திருமணம் நடந்து கொண்டு இருந்தது. ஆனால், அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முககவசம் அணியாமலும் பலர் கூட்டமாக இருந்தனர்.
இதைப் பார்த்த கலெக்டர், திருமணம் நடத்தும் வீட்டினருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்குமாறு ஊராட்சிகள் உதவி இயக்குனர் அண்ணாதுரைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மணமக்களின் வீட்டினருக்கு அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுபாஷ்சந்திரபோஸ், ஞானதிருப்பதி மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story