காயல்பட்டினத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி வாலிபர் பலி
காயல்பட்டினத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி வாலிபர் பலியானார்
ஆறுமுகநேரி:
காயல்பட்டினத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக பலியானார். மற்றொரு வாலிபர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
உடற்பயிற்சி
காயல்பட்டினம் நைனார் தெருவை சேர்ந்தவர் மைதீன் அப்துல் காதர் மகன் இப்ராஹீம் நசீர் (வயது 19). இதே பகுதியில் வசிப்பவர் சேக் முகமது மகன் ஷேக் நூபேஷ்(19). இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலையில் உடற்பயிற்சி செய்வதற்காக இப்ராஹிம் நஷீரின் மோட்டார் சைக்கிளில் காயல்பட்டினம் பைபாஸ் ரோடு சென்றுள்ளனர். அங்கு சிறிது நேரம் உடற்பயிற்சி செய்த பின் சாகுபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்கில், மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுள்ளனர். அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் இருவரும் பைபாஸ் ரோட்டில் காயல்பட்டினம் நோக்கி வந்துள்ளனர்.
தூக்கி வீசப்பட்டனர்
காயல்பட்டினம் பைபாஸ் ரோட்டில் மோட்டார் சைக்கிளை மிக வேகமாக செலுத்தியதாக கூறப்படுகிறது. அப்பொழுது ஒரு தனியார் கிட்டங்கி அருகில் வந்த போது அதிவேகமாக செலுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு சாலையில் ஓடியது. ரோட்டோரத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
ஒருவர் சாவு
இதில் சாலையில் விழுந்த இபுராகிம்நஷீர் தலையில் பலத்த காயமும் ஷேக் நூபேஷ்க்கு முகம் மற்றும் இடுப்பு விலா பகுதியில் பலத்த காயமும் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இபுராகிம் நஷீர் பரிதாபமாக இறந்துபோனார்.
போலீசார் விசாரணை
ஷேக் நூபேஷ் படுகாயத்துடன் சுயநினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக நூபேஷ் தந்தை ஷேக் முகமது ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story