வருகை பதிவேட்டில் டாக்டர்களின் கையெழுத்து இல்லாததால் அதிர்ச்சி


வருகை பதிவேட்டில் டாக்டர்களின் கையெழுத்து இல்லாததால் அதிர்ச்சி
x
தினத்தந்தி 23 Jun 2021 4:53 PM GMT (Updated: 23 Jun 2021 4:53 PM GMT)

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று காலை கூடுதல் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள வருகை பதிவேட்டில் பல டாக்டர்களின் கையெழுத்து இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று காலை கூடுதல் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள வருகை பதிவேட்டில் பல டாக்டர்களின் கையெழுத்து இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நிர்வாக சீர்கேடு
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தொடர்ந்து பல்வேறு நிர்வாக சீர்கேடுகள், குறைபாடுகள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக அரசு ஆஸ்பத்திரியின் நிர்வாகத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் தொடர் புகார் எதிரொலியாக நேற்று காலை ராமநாதபுரம் கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார் ஆய்வு செய்ய திடீரென்று அரசு ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தார். 
பரமக்குடிக்கு ஆய்வுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில் திடீரென்று அரசு ஆஸ்பத்திரிக்குள் வந்ததை யாரும் எதிர்பார்க்க வில்லை. காலை 9.30 மணி அளவில் உள்ளே வந்த கூடுதல் கலெக்டர் நேராக ஆஸ்பத்திரி டீன் அறைக்கு சென்றார். அங்கு யாரும் இல்லாத நிலையில் வாசலில் இருந்த காவல் பணியாளரிடம் டீன் எங்கே என்று கேட்டார். அதற்கு பணியாளர் டீன் இன்று வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
வருகை பதிவேடு
 கூடுதல் கலெக்டர் வந்துள்ள தகவல் தெரிந்ததும் ஆஸ்பத்திரி டாக்டர்கள் விரைந்து வந்தனர். அப்போது கூடுதல் கலெக்டர் அங்கு வைக்கப்பட்டு இருந்த வருகை பதிவேட்டினை எடுத்து பார்த்தார். அதில் சில டாக்டர்கள் பல நாட்களாக வருகை பதிவேட்டில் கையெழுத்திடாமல் இருந்ததை கண்ட கூடுதல் கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். ஏன் இவ்வாறு உள்ளது என்று கடிந்து கொண்ட கூடுதல் கலெக்டர் டாக்டர்கள் வரவில்லை என்றால் விடுப்பு என்று பதிவு செய்து வைப்பதுதான்முறை. அதனை ஏன் செய்யவில்லை என்று விளக்கம் கேட்டார். 
அதற்கு அங்கு நின்ற டாக்டர்கள் மவுனமாக இருந்ததால் கூடுதல் கலெக்டர் அதற்கான விளக்கம் அளிக்குமாறு தெரிவித்தார். கூடுதல் கலெக்டர் வந்துள்ளது பற்றி டீனுக்கு தகவல் தெரிவித்தநிலையில் உடல்நிலை சரியில்லை என்று பதில் அளித்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். 
ஆய்வு
இதனை தொடர்ந்து கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார் கொரோனா தடுப்பூசி போடும் பகுதிக்கும், கொரோனா பரிசோதனை செய்யும் இடத்திற்கும் சென்று ஆய்வு செய்து விவரங்களை கேட்டறிந்தார்.
மேலும், கொரோனா பரிசோதனை செய்ய வருபவர்களிடம் முடிவு அறிவிக்கும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சுமார் ஒரு மணி நேரம் ஆய்வு செய்த கூடுதல் கலெக்டர் அங்கிருந்து கிளம்ப தயாரான நேரத்தில் மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் மலர்வண்ணன் வந்தார். 
அவரிடம் தடுப்பூசி போடும் பகுதியை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவியுங்கள், வருகை பதிவேட்டில் அனைவரும் கையெழுத்திட வேண்டும். அடுத்த ஆய்வுக்கு வரும்போது இதுபோன்ற தவறுகள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். கூடுதல் கலெக்டரின் இந்த திடீர் ஆய்வினால் அரசு ஆஸ்பத்திரி வளாக பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது. 

Next Story