கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஆடு மேய்த்த பெண்ணிடம் மோசடி


கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஆடு மேய்த்த பெண்ணிடம் மோசடி
x
தினத்தந்தி 23 Jun 2021 10:26 PM IST (Updated: 23 Jun 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

மயிலம் அருகே பரபரப்பு

மயிலம், 

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள செண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவருடைய மனைவி வசந்தா (வயது 54). இவர் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். வசந்தா நேற்று முன்தினம் மாலை வயலில் மேய்ச்சலுக்காக விட்டிருந்த ஆடுகளை வீட்டுக்கு ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.  சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக அவர் சென்றபோது, விழுப்புரத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி ஆட்டோவில் வந்த பெண் உள்பட மர்மநபர்கள் 3 பேர் வசந்தாவிடம் ஆடுகளை விலைக்கு தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு வசந்தா மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆட்டோவில் வந்தவர்கள் ஒரு பெரிய ஆடு மற்றும் 5 ஆட்டுக்குட்டிகளுக்கு ரூ.26 ஆயிரம் தருவதாக ஆசைவார்த்தை கூறினர். ஆடுகளுக்கு அதிக பணம் கிடைக்கிறதே? என மகிழ்ச்சியடைந்த வசந்தா அதற்கு சம்மதம் தெரிவி்த்தார். இதையடுத்து அந்த மர்மநபர்கள்  2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக (13 நோட்டுகள்) ரூ.26 ஆயிரத்தை வசந்தாவிடம் கொடுத்து விட்டு, ஆடுகளை வாங்கி ஆட்டோவில் ஏற்றிச் சென்றனர். 
இதையடுத்து வீட்டுக்கு சென்ற வசந்தா ஆடுகள் விற்ற தொகையை தனது மகளிடம் கொடுத்துள்ளார். அவற்றை வாங்கி பார்த்தபோது, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அனைத்தும் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டவை என்பதும், வசந்தாவை ஏமாற்றி, மர்மநபர்கள் ஆடுகளை வாங்கிச் சென்றதும் தெரியவந்தது. இதனால் பதறிய வசந்தா இதுபற்றி மயிலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு, ஆடுகளை விற்பனை செய்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story