குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம்: 100 சதவீத மானியத்தில் உரங்கள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம்: 100 சதவீத மானியத்தில் உரங்கள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 23 Jun 2021 10:43 PM IST (Updated: 23 Jun 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தில் உரம் மற்றும் விதைகளை 100 சதவீத மானியத்தில் விவசாயிகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர், 
தமிழக முதல்-அமைச்சர், மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந் தேதி தண்ணீர் திறந்து விட்டார். 

இந்த நீரை பயன்படுத்தி அதிகப்படியான பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளவும், டெல்டா விவசாயிகளின் நெல் உற்பத்தி மற்றும் வருமானத்தை பெருக்கும் வகையில் குறுவை தொகுப்பு திட்டத்தை ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் அறிவித்தார்.

இந்த தொகுப்பு திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 1989 டன் யூரியா, 1105 டன் டி.ஏ.பி., 552.5 டன் பொட்டாஷ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

100 சதவீத மானியம்

இத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பசுந்தாள் உரப்பயிர் விதையானது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். ஒவ்வொரு விவசாயியும் அதிகபட்சமாக 2 ஏக்கருக்கு தேவையான உரம் மற்றும் பசுந்தாள் உரப்பயிர் விதையினை 100 சதவீத மானியத்தில் பெற்று பயனடையலாம்.

இத்தொகுப்பு திட்டத்தில் பயன் அடைய விரும்பும் டெல்டா விவசாயிகள் தங்கள் கிராமத்தின் உதவி வேளாண்மை அலுவலர் அலுவலரை அணுகி தாங்கள் பயிர் செய்துள்ள நிலத்திற்கான பட்டா அல்லது சிட்டா, அடங்கல் சான்றிதழ் மற்றும் ஆதார் அல்லது உழவர் அடையாள அட்டை அல்லது உழவர் கடன் அட்டையை இணைத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கி பயனடையலாம்.

எந்திரங்கள்

மேலும் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தில், வேளாண்மை பொறியியல் துறை மூலமாக நெல் நடவு எந்திரம், நெல் களை எடுக்கும் எந்திரம், நெல் அறுவடை செய்யும் எந்திரம் மற்றும் வைக்கோல் கட்டும் எந்திரம் ஆகியவை வேளாண் எந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது. 


விவசாயிகள் எந்திரங்களை மானியத்தில் பெற உழவன் செயலி மூலம் தங்கள் விவரத்தை பதிவு செய்து எந்திரங்களுக்கும மானியத்தை பெற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகவேண்டும். 


மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
1 More update

Next Story