கோத்தகிரி நேரு பூங்காவில் மலர்கள் வாடியது
காலநிலை மாற்றம் காரணமாக கோத்தகிரி நேரு பூங்காவில் மலர்கள் வாடியது. இதனால் புதிய நாற்றுகளை தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கோத்தகிரி
காலநிலை மாற்றம் காரணமாக கோத்தகிரி நேரு பூங்காவில் மலர்கள் வாடியது. இதனால் புதிய நாற்றுகளை தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நேரு பூங்கா
கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் நேரு பூங்கா உள்ளது. இந்த பூங்கா உள்ளூர் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக விளங்கி வருகிறது. பூங்காவில் அழகிய புல் தரைகள், ரோஜா பூந்தோட்டம், சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் நூற்றாண்டு பழமை வாய்ந்த பழங்குடியின கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனோர், அம்மனோர் கோவில் ஆகியவை அமைந்துள்ளன.
கோத்தகிரி நேரு பூங்காவில் ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி மே மாதத்தில் தோட்டக்கலை துறை சார்பில் 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த கண்காட்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவிற்கு வந்து செல்வார்கள்.
கொரோனா பரவலால் மூடல்
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் கண்காட்சி நடைபெறவில்லை. இதன்படி கோத்தகிரி நேரு பூங்காவில் நடைபெறும் காய்கறி கண்காட்சியும் ரத்து செய்யப்பட்டது.
கோடை சீசனையொட்டி, நேரு பூங்காவில் கடந்த பிப்ரவரி மாதம் 40 ஆயிரம் புதிய மலர் நாற்றுக்கள் கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகத்தால் நடவு செய்யப்பட்டு, பராமரித்து வந்தனர். இதனால் பூங்காவில் மலர்கள் பூத்து குலுங்கின.
புதிய நாற்றுகள் தயார் செய்யும் பணி
கோத்தகிரி பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக மழை, பனிமூட்டம் என சீதோஷ்ண நிலை மாறிமாறி நிலவி வருகிறது. இதனால் பூங்காவில் பூத்து குலுங்கி வந்த மலர்கள் அனைத்தும் அழுகி காணப்படுகின்றன. இதனால் அழுகிய மலர் நாற்றுக்களை அகற்றிவிட்டு புதிய மலர்நாற்றுக்களை நடவு செய்ய பூங்கா நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.
இதற்காக பூங்காவிலேயே புதிய மலர் நாற்றுக்களை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பூங்காவில் உள்ள புல் தரைகளில் அதிகப்படியாக வளர்ந்துள்ள புற்களை எந்திரங்கள் மூலம் வெட்டி சமப்படுத்தும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
வெறிச்சோடியது
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின்றி கோத்தகிரி நேரு பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக ஊழியர்கள் எவ்வித சிரமமும் இனறி பூங்காவை அழகுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story