முதுமலை புலிகள் காப்பகத்துக்கு ரூ.10 கோடி வருவாய் இழப்பு
ஊரடங்கு கரணமாக சுற்றுலா பயணிகள் வராததால் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு ரூ.10 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூடலூர்
ஊரடங்கு கரணமாக சுற்றுலா பயணிகள் வராததால் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு ரூ.10 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலால் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு தொடங்கியது. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வரவும் தடை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக நீலகிரியில் சுற்றுலா சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது.
கூடலூர் பகுதியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் அனைத்து விடுதிகளும் மூடப்பட்டது. இதனால் கூடலூர், மசினகுடி பகுதியில் சுற்றுலா வாகன ஓட்டிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். பின்னர் சுற்றுலா தலங்கள் படிப்படியாக திறக்கப்பட்டன.
யானை சவாரி
இந்த நிலையில் கொரோனா 2-வது அலை வேகமாகப் பரவியது. இதைத்தொடர்ந்து சுற்றுலா தலங்கள் மீண்டும் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. மேலும் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதேபோல் முதுமலை புலிகள் காப்பகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் பொதுமக்களும் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் புலிகள் காப்பக சாலைகள் மற்றும் முக்கிய இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. இவ்வாறு தொடர் ஊரடங்கால் முதுமலை புலிகள் காப்பகத்தில் வாகன மற்றும் யானை சவாரிகள் நடைபெறுவதில்லை.
ரூ.10 கோடி வருவாய் இழப்பு
இதேபோல் காப்பக பகுதியில் உள்ள வனத்துறையின் தங்கும் விடுதிகளும் தொடர்ந்து மூடிக்கிடக்கிறது. இதனால் காப்பகத்துக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் சுற்றுலா தொழிலை சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள், வாகன சவாரி தொழில்செய்யும் டிரைவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து முதுமலை வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளை வனத்துக்குள் அழைத்து செல்லும் வாகன சவாரி மற்றும் வளர்ப்பு யானைகள் மீது அமர்ந்து வனப்பகுதியை கண்டு ரசிக்கும் சவாரி மூலம் வருவாய் கிடைத்து வந்தது.
இதுதவிர தங்கும் விடுதிகள் மூலமும் கணிசமான வருவாய் ஈட்டப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் வராததால் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு ரூ.10 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story