ஓசூர் அருகே பயங்கரம்: இரட்டை கொலை வழக்கில் ஜாமீனில் வந்த விவசாயி கடத்தி கொலை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


ஓசூர் அருகே பயங்கரம்: இரட்டை கொலை வழக்கில் ஜாமீனில் வந்த விவசாயி கடத்தி கொலை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Jun 2021 6:54 PM GMT (Updated: 23 Jun 2021 6:54 PM GMT)

ஓசூர் அருகே இரட்டை கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த விவசாயி கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓசூர்:
ஓசூர் அருகே இரட்டை கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த விவசாயி கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விவசாயி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே காமன்தொட்டி டோபி காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 50). விவசாயியான இவர் உத்தனப்பள்ளி அருகேயுள்ள ஒரு அட்டை கம்பெனியில் ஊழியராகவும் வேலை செய்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம், உத்தனப்பள்ளி அருகே சானமாவு என்ற இடத்தில் காரில் வந்தவர்கள் மீது லாரியை மோத விட்டு, பெட்ரோல் குண்டுகள் வீசி, ஓசூரை சேர்ந்த பெண் தொழில்அதிபர் நீலிமா மற்றும் அவரது டிரைவர் முரளி ஆகியோரை எரித்து கொலை செய்த வழக்கில், முருகன் 13-வது குற்றவாளி ஆவார். 
இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர், மோட்டார் சைக்கிளில் விவசாய நிலத்திற்கு சென்று வருவதாக மனைவி ரெஜினம்மாவிடம் கூறிவிட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர், உறவினர்கள், அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் முருகன் கிடைக்கவில்லை. 
கல்குவாரி குட்டையில் பிணம்
இந்த நிலையில், முருகன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் காமன்தொட்டி அருகே கங்காபுரம் என்ற இடத்தில் உள்ள ஒரு மாந்தோப்பில் கிடந்தது. இது குறித்து அவரது மனைவி சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே நேற்று காலை, ஓசூர் தாலுகா தொரப்பள்ளி அக்ரஹாரம் அருகே கொல்லப்பள்ளி பக்கமுள்ள ராஜாபுரத்தில் உள்ள கல்குவாரி குட்டையில் ஆண் பிணம் மிதப்பதாக ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது, பிணமாக கிடந்தது முருகன் என்பதும், மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்று கல்லால் தாக்கி கொலை செய்து, உடலை கல்குவாரி குட்டையில் வீசி சென்றதும் தெரியவந்தது. பின்னர், முருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
கொலை செய்யப்பட்ட முருகனுக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே சொத்து சம்பந்தமாக தகராறு இருந்து வருவதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர் கொலை செய்யப்பட்டாரா?, அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கடத்தி கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றர். 
இரட்டை கொலை சம்பவத்தில் ஜாமீனில் வெளியே வந்தவர், கடத்தி கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம், ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story