

திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். அவரும், அவரது மனைவி விஜயா (வயது 45) மற்றும் அப்பகுதி மக்களுடன் நேற்று காலை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார்.விஜயா அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த மாதம் 30-ந்தேதி எங்கள் விவசாய நிலத்தில் உள்ள நிலக்கடலை செடியை, எங்கள் பகுதியை சேர்ந்த ரங்கராஜ் என்பவர் தனது ஆடுகளை விட்டு மேய்த்ததை தட்டி கேட்டபோது என்னை அவர் தாக்கினார். இதுகுறித்து சேவூர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி நானும், எங்கள் பகுதியை சேர்ந்த பெண்களும் தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு வந்தபோது ரங்கராஜ் எங்களைப் பார்த்து திட்டியதுடன் அநாகரிகமாகவும் நடந்து கொண்டார். இது குறித்து சேவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுக்கப்பட்டது.இந்த நிலையில் ரங்கராஜ், எனது கணவர் கருப்புசாமி மீது ஒரு பொய் புகாரை தெரிவித்து, திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் தீக்குளிப்பு நாடகம் நடத்தியுள்ளார். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து நேற்று விசாரணை நடத்தினர்.