பல் மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணி தொடங்க நடவடிக்கை
விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல் மருத்துவக்கல்லூரி
விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்று கடந்த ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு முதல்கட்டமாக அமைப்பு பணிக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் பொது மருத்துவக்கல்லூரி இல்லாமல் பல் மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி வழங்க முடியாது என இந்திய மருத்துவக்கழகம் விதிமுறையை சுட்டிக் காட்டியதால் பல் மருத்துவக்கல்லூரி திட்ட பணி முடங்கியது. இந்நிலையில் கடந்த ஆண்டு மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தில் 11 இடங்களில் மருத்துவக்கல்லூரி தொடங்க நிதி ஒதுக்கீடு செய்த நிலையில் விருதுநகரிலும் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் ரூ. 390 கோடி மதிப்பீட்டில் பொது மருத்துவ கல்லூரி கட்டுமான பணி தொடங்கி முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த மருத்துவக்கல்லூரியில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முடக்கம்
இந்நிலையில் பல் மருத்துவக்கல்லூரி திட்ட பணிகள் தொடங்கப்படாத நிலை இருந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை பல்மருத்துவக்கல்லூரி முதல்வர் தலைமையில் பல் மருத்துவக்கல்லூரிக்கான இடம் தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான குழுவினர் விருதுநகர் வருகை தந்து இடம் கண்டறியும் பணியை மேற்கொண்டனர்.
இறுதியில் கலெக்டர் அலுவலக வளாகம் அருகே பொது மருத்துவக்கல்லூரி கட்டிடத்திற்கு அருகில் பல் மருத்துவக்கல்லூரிக்கும் 8 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது. மாவட்ட நிர்வாகமும் இந்த இடத்தை பல் மருத்துவக்கல்லூரிக்கு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. ஆனாலும் கட்டுமான பணி இன்னும் தொடங்கப்படாத நிலையிலேயே உள்ளது.
நடவடிக்கை
எனவே தமிழக அரசு பல் மருத்துவக்கல்லூரி கட்டுமான பணியை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இக்கல்லூரியின் கட்டுமான பணி தொடங்கி முடிவடையும் வரை வரும் கல்வி ஆண்டில் பல் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்து முதலாமாண்டு பல் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பொது மருத்துவக்கல்லூரி வளாகத்திலேயே கற்றல் பணியை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
பல்மருத்துவ கல்லூரி கட்டுமானப்பணி முடிந்து பயன்பாட்டுக்கு வந்த பின்பு அடுத்த கல்வியாண்டில் பல்மருத்துவ மாணவர்கள் அந்த கட்டிடத்தில் தங்களது படிப்பை தொடர அனுமதிக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story