நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா தடுப்பூசி போட குவிந்த மக்கள்
கொரோனா தடுப்பூசி போட நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் மக்கள் அதிகளவில் குவிந்தனர்.
நெல்லை:
கொரோனா தொற்றுநோய் பரவலை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் ஒரு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், கலெக்டர் அலுவலகம் உள்பட 84 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. தற்போது தடுப்பூசி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் அதிகளவில் திரண்டு வந்து தடுப்பூசி போடுகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், மேலவீரராகவபுரம் சுகாதார நிலையத்திலும் கோவேக்சின் தடுப்பூசி போடப்படும், மற்ற இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள தடுப்பூசி மையங்களில் கோவேக்சின் தடுப்பூசி போட மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இரண்டாவது தவணை கோவேக்சின் தடுப்பூசி போட வந்தவர்கள் அதிக அளவில் இருந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு சென்றனர்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தடுப்பூசி மையம் நேற்று பூட்டப்பட்டிருந்தது. அதில் எந்தவித அறிவிப்பும் செய்யாததால் தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார், தடுப்பூசி குறித்து சரியான தகவல் தெரிவிக்காததால் தடுப்பூசி போட வருகிறவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. எனவே தடுப்பூசி போட வருபவர்களுக்கு சரியான தகவல்களை அதிகாரிகள் ெதரிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story