நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய அர்ச்சகர் மகன் பிணமாக மீட்பு
நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய அர்ச்சகர் மகன் பிணமாக மீட்கப்பட்டார்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் சுவாமிநாதன் (வயது 58). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் அர்ச்சகராக இருந்து வந்தார். இந்த நிலையில் சுவாமிநாதன் தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, குடும்பத்தினருடன் நெல்லைக்கு வந்திருந்தார்.
நிகழ்ச்சி முடிந்த உடன் சுவாமிநாதன், அவருடைய மகன் சங்கர சுப்பிரமணியன் (20), சுவாமிநாதனின் அண்ணன் திருமலை முத்துக்குமாரசாமி (66) ஆகிய 3 பேரும் நெல்லை கைலாசபுரத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர். 3 பேரும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். திடீரென 3 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து, திருமலைமுத்துக்குமாரசாமியை பத்திரமாக மீட்டனர். அதற்குள் சுவாமிநாதன், சங்கர சுப்பிரமணியன் ஆகிய 2 பேரும், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீசார் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கி சுவாமிநாதனை தேடினர். அப்போது அவர் ஆற்றில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. அவருடைய உடலை மீட்டனர்.
சங்கர சுப்பிரமணியனை கடந்த 2 நாட்களாக தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று காலை சங்கர சுப்பிரமணியனின் உடல் வடக்கு பைபாஸ் ஆற்றுப்பாலம் அருகே கரை ஒதுங்கி கிடந்தது. இதை பார்த்தவர்கள் நெல்லை சந்திப்பு போலீசாருக்கும், பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story