நெல்லை அருகே ரவுடி சரமாரி வெட்டிக்கொலை
நெல்லை அருகே, ரவுடி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
பேட்டை:
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த அர்ஜூனன் மகன் மாரியப்பன் (வயது 32). கட்டிட தொழிலாளியான இவர் பெயிண்டிங் வேலைக்கும் சென்று வந்தார்.
நேற்று முன்தினம் இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரும் பாளையங்கோட்டை மகிழ்ச்சி நகரில் பெயிண்டிங் வேலைக்கு மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளனர். இரவு வெகுநேரமாகியும் மாரியப்பன் வீடு திரும்பாததால் அவரது தந்தை அர்ஜூனன் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். மேலும் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை. உடன் சென்ற ஆறுமுகமும் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த அர்ஜூனன், சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி மாரியப்பனை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நள்ளிரவில் கொண்டாநகரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் பின்புறமுள்ள வெயிலுகந்தம்மன் கோவில் அருகே ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடப்பதாக சுத்தமல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, கொலை செய்யப்பட்டு கிடந்தது மாரியப்பன் என்பது தெரியவந்தது. அவரது தலை மற்றும் முகத்தில் சரமாரி வெட்டுக்காயம் இருந்தது. உடல் கிடந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் அவர் வந்த மோட்டார்சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து மாரியப்பனின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாரியப்பன் மீது கொலை, திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் சுத்தமல்லி, சீதபற்பநல்லூர், முன்னீர்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் உள்ளன. மேலும் அவரது பெயர் ரவுடி பட்டியலில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மாரியப்பன் தனது நண்பர் ஆறுமுகத்துடன் மோட்டார்சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் மோட்டார்சைக்கிளில் திரும்பி வந்தனர். ஆறுமுகம் தனது வீட்டுக்கு வந்ததும் சாப்பாட்டு கூடையை வைத்து விட்டு மீண்டும் அதே மோட்டார்சைக்கிளில் மாரியப்பனுடன் சென்றுள்ளார். அதன்பிறகு இருவரும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் தான் மாரியப்பன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் சென்ற ஆறுமுகம் எங்கே சென்றார்? என்று தெரியவில்லை. எனவே, கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் மாரியப்பனின் நண்பர்கள் உள்பட 7 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். நெல்லை அருகே ரவுடி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story