தொடர் மழை எதிரொலி 68 அடியாக உயர்ந்த வைகை அணை நீர்மட்டம்


தொடர் மழை எதிரொலி 68 அடியாக உயர்ந்த வைகை அணை நீர்மட்டம்
x
தினத்தந்தி 18 July 2021 6:03 PM IST (Updated: 18 July 2021 6:03 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியாக உயர்ந்துள்ளது.


ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்வதால் மூல வைகை ஆறு, கொட்டக்குடி மற்றும் சுருளியாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
அந்த ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் வைகை அணையில் போய் சேருகிறது. இ்தன் எதிரொலியாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி வைகை அணைக்கு நேற்று வினாடிக்கு 1,601 கனஅடி நீர்வரத்து இருந்தது.  
71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம், ஏற்கனவே 67 அடிக்கு மேல் இருந்த நிலையில், தற்போது கூடுதல் நீர்வரத்தால் நீர்மட்டம் 68 அடியாக உயர்ந்துள்ளது. 
 விரைவில் நிரம்பும்
வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டும் போது, முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 68.50 அடியில் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியில் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரி தண்ணீராக திறக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் வைகை அணை நீர்மட்டம் 68 அடியை எட்டியுள்ளதால் விரைவில் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வைகை அணையின் நீர்த்தேக்கப்பகுதி கடல்போல காட்சியளிக்கிறது. 
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் 68.01 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 769 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர் இருப்பு 5ஆயிரத்து 299 மில்லியன் கன அடியாக இருந்தது.


Next Story