கொரோனா பரிசோதனை


கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 18 July 2021 1:00 PM GMT (Updated: 18 July 2021 1:00 PM GMT)

திருப்பூருக்கு கடந்த 17 நாட்களில் வடமாநிலங்களில் இருந்து வந்த 9 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 11 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்
திருப்பூருக்கு கடந்த 17 நாட்களில் வடமாநிலங்களில் இருந்து வந்த 9 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 11 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள்
திருப்பூரில் பின்னலாடை தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதனால் இங்கு திரும்பும் திசையெங்கும் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 5 லட்சம் பேரும், வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேரும் அடங்குவர்.
வேலைவாய்ப்பு அதிகமாக இருந்து வருவதால் திருப்பூருக்கு தினமும் பலர் வேலை தேடி வருகிறார்கள். தொழில்துறையினருக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருந்து வருவதால் உடனே அவர்களை வேலைக்கு சேர்த்து விடுகிறார்கள். இந்நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக திருப்பூரில் மூடப்பட்ட பனியன் நிறுவனங்கள் தற்போது தளர்வின் காரணமாக திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
9 ஆயிரம் பேருக்கு பரிசோதனை
இதனால் சொந்த ஊர்களுக்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் பலரும் திருப்பூருக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். இதுபோல் புதிதாக பலரும் வேலை தேடியும் வருகிறார்கள். இதனால் இவர்கள் மூலம் திருப்பூரில் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்பதால், சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் வடமாநிலங்களில் இருந்து ரெயிலில் திருப்பூருக்கு வருகிற தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 17 நாட்களில் திருப்பூருக்கு 9 ஆயிரம் பேர் வந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. 
இதுபோல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று வடமாநிலங்களில் இருந்து அதிகம் பேர் ரெயிலில் திருப்பூருக்கும் வந்தனர். அவர்களுக்கு ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை மும்முரமாக நடைபெற்றது.

Next Story