நகராட்சி பூங்காவில் குவிந்த பொதுமக்கள்


நகராட்சி பூங்காவில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 18 July 2021 9:09 PM IST (Updated: 18 July 2021 9:09 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் சில்வர் பீச்சுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால், நகராட்சி பூங்காவில் பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் அங்கிருந்த ஊஞ்சல், சறுக்கு மரம் உள்ளிட்ட உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.

கடலூர், 

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை வருகிற 31-ந்தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் திரையரங்குகள், அனைத்து மதுபார்கள், நீச்சல் குளங்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் சில்வர் பீச்சுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சில்வர் பீச்சுக்கு பொதுமக்கள் வருவதை தடுக்க பேரிகார்டு அமைத்துள்ளனர். மேலும் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

திருப்பி அனுப்பிய போலீசார்

இந்த நிலையில் பீச்சுக்கு செல்ல விலக்கு அளிக்கப்பட்டதாக கருதிய பொதுமக்கள், தங்கள் குடும்பத்தினருடன், இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் ஆகியவற்றில் பீச்சுக்கு படையெடுக்க தொடங்கினர். அவர்களை அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த தேவனாம்பட்டினர். போலீசார், திருப்பி அனுப்பினர். இதனால் கடலூர் சில்வர் பீச் வெறிச்சோடி காணப்பட்டது. 

விளையாடி மகிழ்ந்தனர்

இதற்கிடையே கடலூர் சில்வர் பீச்சுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால், பொழுதை கழிப்பதற்காக பொதுமக்கள் கடலூர் நகராட்சி பூங்கா பக்கம் திரும்பினர். அங்கு அவர்கள் தங்கள் குழந்தைகளை ஊஞ்சலில் ஆட வைத்தனர். குழந்தைகள் மட்டுமல்லாது, பெண்களும், ஆண்களும் ஊஞ்சல், சறுக்கு மரம் உள்ளிட்ட உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர். அங்கு வந்த சில பெண்கள், இளைஞர்கள் தங்களது செல்போனில் ‘செல்பி’யும் எடுத்துக்கொண்டனர். இதனால் கடலூர் நகராட்சி பூங்கா நேற்று களைகட்டியது. 

Next Story