சரக்கு வேன்-லாரி நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி


சரக்கு வேன்-லாரி நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 19 July 2021 12:23 AM IST (Updated: 19 July 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணராயபுரம் அருகே சரக்கு வேன்-லாரி நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணராயபுரம்
நேருக்கு நேர் மோதல்
திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 23). இவர் நேற்று அதிகாலை ஒரு சரக்கு வேனில் உர மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருச்சியில் இருந்து கரூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே கரூரில் இருந்து திருச்சி நோக்கி ஒரு டாரஸ் லாரி சென்று கொண்டிருந்தது. 
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள திருக்காம்புலியூர் பகுதியில் வந்தபோது, சரக்கு வேனும், லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி கொண்டது. இதில் சரக்கு வேனின் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது. 
பலி
இதில் சரக்கு வேனில் இடிபாடுகளில் சிக்கி வேன் டிரைவர் சரவணன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் மாயனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, படுகாயம் அடைந்த சரவணனை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தார். 
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்தால் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Related Tags :
Next Story