மின்சார வாகனங்களை பயன்படுத்த திட்டம் அமைச்சர் மெய்யநாதன் பேட்டி


புதுக்கோட்டை
x
புதுக்கோட்டை
தினத்தந்தி 19 July 2021 12:52 AM IST (Updated: 19 July 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் எதிர்காலத்தில் மின்சார வாகனங்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை
சிலம்ப போட்டி
புதுக்கோட்டையில் மாவட்ட விளையாட்டரங்கத்தில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்க உள்ள உயர்மின் கோபுர விளக்கு அடிக்கல் நாட்டு விழாவில் நேற்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
 அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் வீரர்கள் அனைவருக்கும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உரிய உடல் தகுதியுடன் பாதுகாப்பாக செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து சென்றுள்ள ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுடன் வாட்ஸ்-அப் குரூப்பில் தினமும் பேசப்பட்டு வருகிறது. பாரம்பரிய சிலம்ப போட்டியை தமிழக அரசின் பாட நூலில் சேர்ப்பது, சிலம்ப போட்டியில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களையும் 3 சதவீத இட ஒதுக்கீட்டில் கொண்டு வருதல், சிலம்ப போட்டியை தேசிய அளவிலான போட்டியில் சேர்ப்பதற்கும் முதல்-அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மின்சார வாகனங்கள்
தீபாவளி பண்டிகையின் அன்று சுப்ரீம் கோர்ட்டு நடைமுறைகள் கடை பிடிக்கப்படும். பசுமை பட்டாசு என்பதை விட பட்டாசே தேவையில்லை என்பது தான் சுற்றுச்சூழல்துறையின் கருத்து. ஒரு நாள் பட்டாசு வெடிப்பதற்கு பதிலாக ஒவ்வொருவரும் ஒரு ஆண்டிற்கு 5 மரக்கன்றுகளையாவது நட்டு வளர்க்க வேண்டும். தமிழகத்தில் காற்று மற்றும் நீர் மாசு ஏற்பட்ட பகுதிகள் கண்டறிந்து அதனை தடுக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் பயன்படுத்துவது குறித்தும் முதல்-அமைச்சரின் தொலை நோக்குத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. 
நதிகளை பாதுகாத்தல்
சாயக்கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து ஆறுகளையும் பாதுகாக்கவும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் உள்ள ஏரி, குளங்களை பாதுகாக்கவும், காவிரி, நொய்யல், பவானி, காலிங்கராயன் வாய்க்கால் போன்ற நதிகளை பாதுகாப்பதற்கான புதிய திட்டங்களையும் முதல்-அமைச்சர் மேற்கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் கவிதா ராமு, மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன், நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன், முன்னாள் அரசு வக்கீல் செல்லபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீரமங்கலம்
 கீரமங்கலம் அருகே உள்ள செரியலூர் ஜெமின் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கு அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து செரியலூர்-கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோவில் ராஜகோபுரம் திருப்பணியை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் திருப்பணிக் குழுவினர் கலந்து கொண்டனர்.

Next Story