கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை


கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
x
தினத்தந்தி 19 July 2021 1:06 AM IST (Updated: 19 July 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் சொக்கநாதசுவாமி கோவிலுக்குள் நள்ளிரவில் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர்,
விருதுநகர் சொக்கநாதசுவாமி கோவிலுக்குள் நள்ளிரவில் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சொக்கநாத சுவாமி கோவில்
விருதுநகரின் மையப்பகுதியில் இந்து சமய அறநிலைய துறை நிர்வாகத்தின்கீழ் சொக்கநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் முன்னாள் ராணுவ வீரர் மாயாவு என்பவர் இரவு காவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பாதுகாப்பு கருதி கோவிலில் 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் கோவில் அர்ச்சகர் நாரம்புநாதன் பூஜைக்காக கோவிலை திறந்து உள்ளே சென்றார். 
உண்டியல் உடைப்பு 
அப்போது தட்சிணாமூர்த்தி சன்னதியில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
 அவர் உடனடியாக கோவில் நிர்வாக அதிகாரி தேவிக்கு தகவல் தெரிவித்தார். அவர் கோவிலுக்கு வந்து பார்த்தபோது உண்டியல் அருகே கம்பி கிடந்தது. மேலும் அருகில் உள்ள சுவரில் பொருத்தப்பட்டிருந்த கேமரா உடைக்கப்பட்டு கீழே கிடந்தது. கோவில் காவலாளி மாயாவுவிடம் விசாரித்தபோது தான், நேற்று முன் தினம் இரவு 7.45 மணியளவில் பணிக்கு வந்ததாகவும் இந்த சம்பவம் நள்ளிரவில் நடந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி கோவில் நிர்வாக அதிகாரி தேவி விருதுநகர் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கோவிலில் இருந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அதில் வாலிபர் ஒருவர் உண்டியலை உடைக்கும் முயற்சியில் ஈடுபடும் காட்சி பதிவாகி இருந்தது.
 இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகிறார். நகரின் மையப்பகுதியில் உள்ள கோவிலில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புகார் 
இதுபற்றி கோவில் நிர்வாக அதிகாரி தேவியிடம் கேட்டபோது, கடந்த ஜனவரி மாதம் உண்டியலை திறந்து பணம் எண்ணப்பட்டதாகவும், அதன் பின்பு கொரோனா ஊரடங்கால் கோவில் திறக்கப்படாத நிலையில் சமீபத்தில் தான் கோவில் திறக்கப்பட்டது. ஆதலால்  உண்டியலில் அதிக பணம் இருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.
 அவர் தனது புகாரில் உண்டியலில் ஆயிரம் ரூபாய் இருந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கோவில் கோட்டை சுவரில் ஏறித்தான் கோவிலுக்குள் புகுந்துள்ளான். எனவே கோவில் கோட்டை சுவர் உயரத்தை அதிகரிப்பதுடன், சுவரைஒட்டி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். 

Next Story