ரெயில்வே ஊழியர் தாய் மர்ம சாவு: நகைக்காக வாயில் துணியை அழுத்தி கழுத்தை நெரித்துக்கொலை - வேலைக்கார பெண், கணவருடன் கைது


ரெயில்வே ஊழியர் தாய் மர்ம சாவு: நகைக்காக வாயில் துணியை அழுத்தி கழுத்தை நெரித்துக்கொலை - வேலைக்கார பெண், கணவருடன் கைது
x
தினத்தந்தி 19 July 2021 1:35 AM IST (Updated: 19 July 2021 12:25 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் ரெயில்வே ஊழியரின் தாய் மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பமாக அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வேலைக்கார பெண், கணவருடன் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் ரெயில்வே ஊழியரின் தாய் மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பமாக அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வேலைக்கார பெண், கணவருடன் கைது செய்யப்பட்டு உள்ளார். 

ரெயில்வே ஊழியர் தாய்

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள முனிசிபல்காலனி முத்தமிழ் நகர் சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவருடைய மனைவி ஜோஸ்பின்மேரி (வயது 64). இவர்களுடைய மகன் பிராங்களின். இவர் ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக மதுரையில் வேலை பார்த்து வருகிறார். அந்தோணிசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.தஞ்சையில் உள்ள வீட்டில் ஜோஸ்பின்மேரியும், பிராங்களினும் வசித்து வந்தனர். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற பிராங்கிளின், மாலையில் தனது தாயிடம் பேச செல்போனை தொடர்பு கொண்டார். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் வீட்டின் மற்றொரு பகுதியில் வாடகைக்கு வசிப்பவர்களுக்கு போன் செய்து தனது வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறினார். 

போலீசில் புகார்

இதன்பேரில் அவர்கள் அங்கு சென்று பார்த்த போது ஜோஸ்பின்மேரி சோபாவில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் செல்போன் ஆகியவற்றை காணவில்லை. இது குறித்து பிராங்ளின் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார்.
ஜோஸ்பின்மேரியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கழுத்தை நெரித்துக்கொலை

இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் ஜோஸ்பின்மேரி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து தஞ்சை டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.  கொலையாளியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 
அதன்பேரில் இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், ராம்தாஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் டேவிட், கண்ணன் ஆகியோர் தலைமையில்  தனிப்படையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

வேலைக்கார பெண் சிக்கினார்

அப்போது ஜோஸ்பின்மேரி வீட்டில் வேலை பார்த்த தஞ்சை மானோஜிப்பட்டி தியாகராஜர் நகரை சேர்ந்த யோபேல்விக்டர்(35) மனைவி ஆரோக்கியடென்சியை (34) பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். 
விசாரணையில்  ஜோஸ்பின்மேரியை கொலை செய்து அவர் அணிந்திருந்த 5½ பவுன் நகைகளை ஆரோக்கியடென்சி  கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் செல்போனை அருகில் இருந்த சாக்கடையில் வீசியதும் தெரிய வந்தது.

கணவருடன் கைது

இதைத்தொடர்ந்து சந்தேக மரணம் என பதியப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி ஆரோக்கிய டென்சியை போலீசார் கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக செயல்பட்டதாக கூறி ஆரோக்கிய டென்சியின் கணவர் யோபேல்விக்டரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் ஆரோக்கிய டென்சி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ஜோஸ்பின்மேரியின் வீட்டிற்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் வேலைக்கு ஆரோக்கிய டென்சி சேர்ந்துள்ளார். கடந்த 15-ந்தேதி வேலைக்கு வந்த போது ஜோஸ்பின்மேரி தனக்கு தோள்பட்டை வலிக்கிறது, அமுக்கி விடு என கூறி உள்ளார். அப்போது ஜோஸ்பின்மேரியின் கழுத்தில் கிடந்த நகையை ஆரோக்கிய டென்சி கழற்றி உள்ளார். உடனே அவர் சத்தம் போட முயன்ற போது வாயில் துணியை அழுத்தி  கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் ஜோஸ்பின்மேரி அணிந்திருந்த நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story