கடம்பத்தூரில் ரெயில்வே மேம்பாலம் இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்


கடம்பத்தூரில் ரெயில்வே மேம்பாலம் இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 19 July 2021 6:55 AM IST (Updated: 19 July 2021 6:55 AM IST)
t-max-icont-min-icon

கடம்பத்தூரில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், 2 மாதத்தில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் சாலையில் கடம்பத்தூர் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் அருகே ரெயில்வே கேட் ஒன்றும் அமைந்துள்ளது. பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வேலையின் காரணமாக திருவள்ளூருக்கு தினந்தோறும் வந்து செல்வது வழக்கம்.

அவ்வாறு வரும்போது கடம்பத்தூர் ரெயில்வே கேட் அடிக்கடி திறந்து மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாமல் அவதியுற்று வந்தனர். இதற்கு தீர்வாக கடம்பத்தூர் ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை எளிதாக கடக்கும் விதமாக மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து 2015-ம் ஆண்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. இப்பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு பணிகள் நிறுத்தப்பட்டது.

2 மாதங்களில் திறப்பு

இதை தொடர்ந்து திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.வி.ஜி.ராஜேந்திரன் ரெயில்வே துறை அதிகாரிகளிடம் கடம்பத்தூரில் பொதுமக்கள், பயணிகள் பயன்பெறும் வகையில் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு வைக்கவேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் அவர், கடம்பத்தூர் மேம்பாலத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், ரெயில்வே மேம்பாலத்தின் மீது மின்கம்பங்கள் அமைக்கும் பணியும், சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இப்பணி இன்னும் 2 மாதங்களில் முழுமை பெற்று மேம்பாலம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story