திருட முயன்றதாக பிடிபட்ட வடமாநில தொழிலாளி திடீர் சாவு
திருட முயன்றதாக பிடிபட்ட வடமாநில தொழிலாளி திடீர் சாவு
கருமத்தம்பட்டி
திருட முயன்றதாக பிடிபட்ட வடமாநில தொழிலாளி திடீரென இறந்தார். அவர், பொதுமக்கள் தாக்கியதில் இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமாநில தொழிலாளி
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே தனியார் மில்லில் பணியாற்றுவதற்காக கடந்த வாரம் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து சுரேஷ் பிரசாத் என்பவரது மகன் கசேந்திர பிரசாத் (வயது45) என்பவர் வந்துள்ளார்.
அவர்தனியார் மில்லில் 2 நாட்களாக தங்கி சமையல் வேலை பார்த்து உள்ளார்.
இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு மில்லில் இருந்து வெளி யேறினார். பின்னர் அவர் வேட்டைக்காரன்குட்டை பகுதியில் உள்ள மணி என்பவர் வீட்டிற்குள் இரவு 2.30 மணியளவில் சுவர் ஏறி குதித்து உள்ளார்.
விசாரணை
இதையறிந்த மணி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் அவர் கூச்சலிட்டதும், அக்கம்பக்கத்தினர் திரண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கசேந்திரபிரசாத் தப்பி ஓட முயன்றார்.
உடனே அவரை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். அப்போது அவரை சிலர் கட்டி வைத்து தாக்கியதாக தெரிகிறது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார், கசேந்திரபிரசாத்தை ேபாலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
திடீர் சாவு
இந்த நிலையில் நேற்று காலை அவருக்கு திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடனே அவரை ஆட்டோவில் ஏற்றி சோமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே கசேந்திரபிரசாத் திடீரென்று பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அவரது உடல் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. அவருடைய உடல் சூலூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
காரணம் என்ன
அவர் எப்படி இறந்தார்?. திருட முயன்ற போது பொதுமக்கள் யாரும் தாக்கினார்களா?. அவர் இறப்புக்கு என்ன காரணம்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருட முயன்ற போது பொதுமக்களால் பிடிக்கப்பட்ட வடமாநில தொழிலாளி கசேந்திரபிரசாத் போலீஸ் நிலையத்தில் இருந்து ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story