தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் வேப்பிலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தீத்து. இவரது மகன் இங்கர்சால் (வயது 28). இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இதேபோன்று கோவை மாவட்டம் மருதமலையை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மகள் வனிதா (26), பி.பி.ஏ. பட்டதாரி. இந்த நிலையில் இங்கர்சாலுக்கும், வனிதாவுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த நிலையில் காதலர்கள் தர்மபுரி மாவட்டம் மூக்கனூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே னிதாவின் தந்தை அருணாசலம் தனது மகள் காணாமல் போய்விட்டதாக வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வனிதாவை தேடிவந்தனர். அப்போது வனிதா வேப்பிலைப்பட்டியில் இங்கர்சால் வீட்டில் இருப்பது தெரிய வந்தது. வனிதாவை மீட்பதற்காக வடவள்ளி போலீசார் தர்மபுரி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காதல் ஜோடி இங்கர்சால் மற்றும் வனிதா ஆகிய இருவரும் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முறையிடுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story