பிளஸ்-2 தேர்வில் அனைவரும் தேர்ச்சி: புதிய மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கு மாணவர்கள் வரவேற்பு
பிளஸ்-2 தேர்வில் அனைவரும் தேர்ச்சிக்கும், புதிய மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கும் மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம்,
புதிய நடைமுறை
கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு தேர்வு எழுதாமலேயே பிளஸ்-2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் படிப்புக்கு மதிப்பெண் கட்டாயம் என்பதால் முதல் முறையாக தசம எண் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மதிப்பெண்கள் திருப்தி இல்லை என்றால் தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய நடைமுறையில் தேர்ச்சி பெற்றுள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர்களில் சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதன் விவரம் வருமாறு:-
திருப்தியாக உள்ளது
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி இலக்கியா:-
நான் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என்று படித்தேன். நான் எதிர்பார்த்தபடியே மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். 524 மதிப்பெண்கள் பெற்றிருப்பது திருப்தி அளிப்பதாக உள்ளது. கொரோனா தொற்று குறைந்து பள்ளிகள் திறந்திருந்து தேர்வு எழுதியிருந்தால் 550 முதல் 570 மதிப்பெண்கள் வரை பெற்றிருக்க முடியும் என்று தோன்றுகிறது. எதிர்காலத்தில் எந்தவொரு வேலைவாய்ப்புக்கு சென்றாலும் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையாக தேவைப்படுகிறது. நான் தற்போது மருத்துவ படிப்புக்காக நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறேன். எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு என்று வரும்போது கொரோனா பேட்ஜ் மாணவர்கள் என்று கருதி வேலைவாய்ப்பில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு விடுமோ? என்று சற்று அச்சமாக உள்ளது.
அரசின் சரியான முடிவு
விழுப்புரம் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்த பிளஸ்-2 மாணவி பிரியதர்ஷினி:-
எப்போது வேண்டுமானாலும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற நம்பிக்கையில் விடாமுயற்சியுடன் படித்தேன். 550 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என்று நினைத்து படிப்பில் அதிக கவனம் செலுத்தினேன். ஆனால் கொரோனா ஊரடங்கினால் பள்ளிகள் திறக்காமல் இருந்த சூழலில் தேர்வையும் ரத்து செய்து விட்டதால் தேர்வு முடிவுகள் எப்படி வருமோ என்று மனஉளைச்சலில் இருந்தேன். இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் அரசு சரியான முடிவு எடுத்து தேர்வு முடிவுகளை வெளியிட்டிருப்பதற்காக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இருந்தாலும் நான் எதிர்பார்த்த மதிப்பெண்ணை விட தற்போது எனக்கு 502 மதிப்பெண்கள் கிடைத்திருப்பது சற்று ஏமாற்றம் அளிப்பதாகத்தான் உள்ளது. மீண்டும் தேர்வு வைத்தால்கூட அதை எழுத நான் தயாராகத்தான் இருக்கிறேன். இருப்பினும் புதிய மதிப்பெண் கணக்கீட்டு முறையை நான் வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கூடுதல் மதிப்பெண்
கள்ளக்குறிச்சி அரசு பெருமாள்கோவில் தெருவை சேர்ந்த பிளஸ்-2 மாணவி சுபஸ்ரீ:-
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வகுப்புகள் சரியாக நடைபெறவில்லை. இருந்தாலும் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைத்ததை பார்த்து படித்து வந்தேன். அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்வுக்கு தயாராகி வந்தேன். ஆனால் கொரோனா தொற்று காரணமாக பொதுத்தேர்வு நடைபெறவில்லை. செய்முறை தேர்வு மட்டும் நடைபெற்றது. இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் நான் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக மதிப்பெண் கிடைத்து இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
மகிழ்ச்சியாக இருக்கிறது
கள்ளக்குறிச்சி மந்தைவெளிப்பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் பிரகாஷ்:-
கொரோனா நோய் காரணமாக வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை. ஆசிரியர்கள் பாடம் நடத்தி வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைத்ததை கொண்டு அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என படித்து வந்தேன். பொதுத் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக தேர்வு நடைபெறவில்லை. இதற்கிடையே பிளஸ்-2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவித்தது. ஆனால் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. அதன்படி நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் நான் எதிர்பார்த்த மதிப்பெண் எனக்கு கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
Related Tags :
Next Story