கல்வராயன்மலையில் விவசாயி சாவில் திடீர் திருப்பம் நிலத்தை பிரித்து தர மறுத்ததால் கணவனை கொன்றேன் 2-வது மனைவி பரபரப்பு வாக்குமூலம்
கல்வராயன்மலையில் விவசாயி மர்மமான முறையில் இறந்த வழக்கில் திடீர் திருப்பமாக நிலத்தை பிரித்து தர மறுத்ததால் அவரது 2-வது மனைவியே அடித்துக் கொன்றது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்
கச்சிராயப்பாளையம்
விவசாயி
சேலம் மாவட்டம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாதுரை (வயது 53). சம்பவத்தன்று இவர் கல்வராயன்மலையில் மணியார்பாளையம் அருகே தனக்கு சொந்தமான நிலத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது காது, மூக்கு பகுதிகளில் ரத்தம் வழிந்து காணப்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கரியாலூர் போலீசார் அய்யாதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
2-வது மனைவி சரண்
இந்த நிலையில் சேலம் மாவட்டம் கருமந்துறை போலீஸ் நிலையத்தில் அய்யாதுரையின் 2-வது மனைவி மல்லிகா(40), தான் தனது கணவரை கொலை செய்துவிட்டேன் என்று கூறி சரண் அடைந்தார்.
இது பற்றி சம்பந்தப்பட்ட கரியாலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கரியாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் கருமந்துறை சென்று மல்லிகாவை கரியாலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது அய்யாதுரையை கொலை செய்ததற்கான காரணம் குறித்து மல்லிகா போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தின் விவரம் வருமாறு:-
நிலத்தை பிரித்து தர...
அய்யாதுரையின் முதல் மனைவி லட்சுமி. அவர்களுக்கு ரம்யா, சவுமியா என்ற 2 மகள்களும், வேல்முருகன் என்ற மகனும் உள்ளனர். திருமணமான 6-வது வருடத்தில் லட்சுமி இறந்துவிட்டதால் அய்யாதுரை என்னை 2-வது திருமணம் செய்து கொண்டார். சக்திவேல் என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் எனது கணவர் அய்யாதுரை பெயரில் மணியார்பாளையம் அருகே விவசாய நிலம் உள்ளது. இதை பிரித்து தர வேண்டும் என பலமுறை கூறியும் அவர் செய்து தரவில்லை.
மண்வெட்டியால்...
இதற்கிடையே சம்பவத்தன்று நானும், எனது கணவரும் மணியார்பாளையத்தில் உள்ள நிலத்தை பார்த்து வருவதற்காக சென்றோம். அங்கு எனது கணவர் குடிபோதையில் இருந்தார். அப்போது அவரிடம் நிலத்தை பிரித்து தருமாறு கேட்டபோது அவர் தர மறுத்துவிட்டார். இதனால் எங்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த நான் எனது கணவரை கீழே தள்ளி விட்டேன். பின்னர் களை எடுக்க பயன்படுத்தும் சிறிய மண்வெட்டியால் அவரது தலையில் ஓங்கி அடித்தேன். இதில் படுகாயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். உடனே நான் ஒன்றும் தெரியாதது போல அங்கிருந்து புறப்பட்டு ஊருக்கு வந்து விட்டேன்.
பின்னர் மறுநாள் எனது கணவர் இறந்து போனதை கேள்விப்பட்டதும் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தேன்.
இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் கூறியிருந்தார்.
கைது
இதையடுத்து மல்லிகாவை போலீசார் கைது செய்தனர்.
சொத்தை பிரித்து தர மறுத்த கணவரை அவரது மனைவியே அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story