கடலூரில், மீனவ பெண்கள் சாலை மறியல்
சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி கோரி கடலூரில் மீனவ பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுருக்குமடி வலைக்கு தடை
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சில மீனவர்கள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வந்தனர். இதை அறிந்த மாவட்ட நிர்வாகம், சுருக்குமடி வலையை பயன்படுத்தினால் படகுகளோடு வலைகளும் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது.
இருப்பினும் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் சுருக்குமடி வலையை பயன்படுத்த தமிழகம் முழுவதும் அரசு தடை விதித்துள்ளது. ஆகவே அந்த வலையை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று மாவட்ட நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்தது.
குடும்பத்துடன் உண்ணாவிரதம்
இதை கண்டித்தும், சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த 17-ந்தேதி கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்கள், விழுப்புரம், புதுச்சேரி மீனவர்களும் பங்கேற்றனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று மீண்டும் சுருக்குமடி வலையை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம், அரசு உரிய அனுமதி தர வேண்டும், சுருக்குமடி வலைக்கு தடை விதித்தால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் என்று கடலூர் தேவனாம்பட்டினத்தில் மீனவர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
கருப்புக்கொடியுடன் ஊர்வலம்
இதேபோல் கடலூர் முதுநகர் ராசாப்பேட்டை கடற்கரையிலும் அப்பகுதி மீனவர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதற்கிடையில் தேவனாம்பட்டினத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்த நிலையில், மீனவ பெண்கள் கலெக்டரிடம் எங்களின் கோரிக்கைகளை நேரில் தெரிவிக்க இருக்கிறோம் என்று கூறி, அங்கிருந்து கருப்புக்கொடியுடன் ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவர்களை செல்ல விடாமல் தடுத்தனர்.
இருப்பினும் அதையும் மீறி, மீனவ பெண்கள் சில்வர் பீச் சாலை வழியாக நடந்து கடலூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு வந்த போலீசார் நடந்து வந்த பெண்களை வழிமறித்து தடுத்தனர். ஆனால் அவர்கள் நாங்கள் கலெக்டரை சந்திக்க போகிறோம் என்று கூறி புறப்பட்டனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு தான் செல்கிறார்கள் என நினைத்த போலீசார், அங்கு சென்று கலெக்டர் அலுவலக சாலையில் தடுப்பு கட்டைகள் அமைத்தனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் மீனவ பெண்கள் பாரதி சாலை, கடலூர் சில்வர் பீச் சந்திக்கும் சிக்னல் பகுதியில் மதியம் 1.15 மணி அளவில் திடீரென சாலை அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே, சுருக்குமடி வலைக்கு அனுமதி கொடு என்று கோஷமிட்டனர்.
இதை அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட மீனவ பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி கிடைக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று திட்டவட்டமாக மறுத்து, தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம்
மேலும் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து, எங்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு போலீசார் உங்களில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டரை சந்திக்க அனுமதி பெற்று தருகிறோம். மற்றவர்கள் கலைந்து செல்லுங்கள் என்றனர். ஆனால் அதை கேட்காமல் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். சிலரை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போலீசாருக்கும், மீனவ பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து அவர்கள் கொளுத்திய வெயிலிலும் அமர்ந்து மறியல் செய்தனர். 2 பெண்களுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு சக பெண்கள் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தாசில்தார் பலராமன் ஆகியோர் வந்து, மறியலில் ஈடுபட்ட மீனவ பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள், உங்களின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும் என்றனர். இதை கேட்ட பெண்கள், எப்போது, எந்த தேதியில் எங்களுக்கு அனுமதி பெற்று தருவீர்கள் என்று கூற வேண்டும் என்று தெரிவித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் அடுத்தடுத்து நடந்து வந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து மீனவ பெண்களின் போராட்டம் நள்ளிரவு 12 மணியை கடந்து நீடித்தது. இந்த தொடர் மறியலால் கடலூர் பாரதி சாலை, சில்வர் பீச் ரோட்டில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டன.
இதை அறிந்ததும் போலீசார் மாற்று வழியில் வாகனத்தை திருப்பி விட்டனர். அதாவது கடலூர் பாரதி சாலை வழியாக செல்லாமல் ஜவான் பவன் சாலை, கம்மியம்பேட்டை, செம்மண்டலம் வழியாக மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. சில்வர் பீச் செல்வோர் புதுப்பாளையம் வழியாக சென்றனர்.
கடலில் இறங்கி போராட்டம்
இதேபோல் சுருக்குமடி வலைக்கு அனுமதிக்க கோரி ராசாப்பேட்டையில் உண்ணாவிரதம் நடத்தி வந்த மீனவர்கள், திடீரென கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், சுருக்குமடி வலையை பயன்படுத்த அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய அனுமதி வழங்க வேண்டும். சுருக்குமடி வலை இல்லாமல் எங்களால் தொழில் செய்ய முடியாது என்று கூறி கோஷமிட்டனர். இதை அறிந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்து, அவர்களை வெளியேற்றினர்.
சுருக்குமடி வலைக்கு அனுமதி கேட்டு கடலூரில் அடுத்தடுத்து மீனவர்கள் நடத்திய போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story