கண்மாயில் பிடித்த மீனை வாயில் கவ்வியிருந்த வாலிபர் சாவு


கண்மாயில் பிடித்த மீனை  வாயில் கவ்வியிருந்த வாலிபர் சாவு
x
தினத்தந்தி 20 July 2021 12:17 AM IST (Updated: 20 July 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே கண்மாயில் இறங்கி மீன் பிடித்த வாலிபர் தொண்டையில் மீன் சிக்கி பரிதாபமாக பலியானார்.

காரைக்குடி,ஜூலை.
காரைக்குடி அருகே கண்மாயில் இறங்கி மீன் பிடித்த வாலிபர் தொண்டையில் மீன் சிக்கி பரிதாபமாக பலியானார்.
ஒன்றாக மீன் பிடித்தனர்
காரைக்குடி அருகே குன்றக்குடி போலீஸ் சரகம், சின்னக்குன்றக்குடி கண்மாயில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் ஒன்று சேர்ந்து மீன் பிடித்தனர். அப்போது கீழச்சிவல்பட்டி அருகே உள்ள மான்கொம்பு என்ற பகுதியைச் சேர்ந்த இளையராஜா (வயது 30) என்ற வாலிபரும் கண்மாயில் இறங்கி மீன் பிடித்தார். 
அப்போது அவர் ஒரு மீனை லாவகமாக பிடித்து தனது வாயில் கவ்விக் கொண்டு மற்ற மீன்களைப் பிடிக்க முயற்சித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வாயில் கவ்வியிருந்த மீன் இளையராஜாவின் தொண்டைக்குள் சென்றது. இதனால் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்ட இளையராஜா கரையேறினார். 
சாவு
அவரது நிலையை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இளையராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்மாயில் உற்சாகமாக மீன்பிடித்த வாலிபர் ஒருவர் அந்த மீனாலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

Next Story