மாவட்டத்தில் 6 பேர் 590 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனர்
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதையொட்டி திருச்சி மாவட்டத்தில் 6 பேர் 590 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
திருச்சி
பிளஸ்-2 தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 2020-21-ம் கல்வி ஆண்டிற்கான பிளஸ்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக கடந்த ஜூன் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து பிளஸ்-2 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க வழிகாட்டுக்குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு தனது பரிந்துரையை கடந்த 25-ந் தேதி முதல்-அமைச்சரிடம் அளித்தது. இதனை தொடர்ந்து பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 2020-21-ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகள், ஆதிதிராவிட நலப் பள்ளிகள், பழங்குடியினர் நலப்பள்ளி, மெட்ரிக் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் உள்பட மொத்தம் 257 பள்ளிகளை சேர்ந்த 14,723 மாணவர்களும், 17,33 மாணவிகளும் என மொத்தம் 32,056 பேர் தேர்வு எழுத இருந்தனர்.
590 மதிப்பெண்களுக்கு மேல்
கொரோனா பெருந்தொற்று காரணமாக பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் திருச்சி மாவட்டத்தில் தேர்வு எழுத இருந்த 32,056 மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம் மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் வேதியியல் பாடத்தில் ஒரு மாணவர் மட்டும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதேபோல் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
590 மதிப்பெண்களுக்கு மேல் 6 மாணவ-மாணவிகள் பெற்றுள்ளனர். 580 முதல் 590 மதிப்பெண்கள் வரை 92 பேரும், 570 முதல் 580 மதிப்பெண்கள் வரை 261 பேரும், 560 முதல் 570 வரை 468 பேரும், 550 முதல் 560 வரை 775 பேரும் மதிப்பெண்களை பெற்றுள்ளனர் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் குறித்து அந்தந்த பள்ளிகளில் இருந்து மாணவ-மாணவிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், செல்போன்கள் மூலம் மாணவ-மாணவிகள் தங்களது மதிப்பெண்களை ஆர்வமுடன் தெரிந்து கொண்டனர். இணையதள மையங்களிலும் மதிப்பெண்களை தெரிந்து கொள்வதற்காக மாணவ-மாணவிகள் குவிந்தனர்.
மண்ணச்சநல்லூர்
மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 280 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் திவாகர் என்ற மாணவர் 545.21 மதிப்பெண்களும், சிவகார்த்திகேயன் என்ற மாணவர் 535.35 மதிப்பெண்களும், கோபிநாத் என்ற மாணவர் 528.26 மதிப்பெண்களும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
இதேபோல், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 524 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பிரீத்தா என்ற மாணவி 580.33 மதிப்பெண்களும், வினோதினி என்ற மாணவி 576.68 மதிப்பெண்களும், மகாலட்சுமி என்ற மாணவி 575.82 மதிப்பெண்களும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தண்டபாணி, அன்புசேகரன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story