கொரோனா பீதிக்கு மத்தியில் கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது


கொரோனா பீதிக்கு மத்தியில் கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 20 July 2021 2:52 AM IST (Updated: 20 July 2021 2:52 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பீதிக்கு மத்தியில் கர்நாடகத்தில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. பரிசோதனைக்கு பிறகே மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

பெங்களூரு: கொரோனா பீதிக்கு மத்தியில் கர்நாடகத்தில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. பரிசோதனைக்கு பிறகே மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

சானிடைசர் திரவம், முகக்கவசம்

கொரோனா பரவல் காரணமாக கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் கல்லூரி, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்யும் வகையில் பாடங்களை 2 ஆக சுருக்கி விடைகளை தேர்ந்து எடுத்து எழுதும் முறைப்படி 2 தேர்வுகளை நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது. மேலும் ஜூலை 19 (நேற்று) மற்றும் 22-ந் தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை செய்து வந்தது.

இந்த நிலையில் கொரோனா பீதிக்கு மத்தியில் நேற்று கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை 8¾ லட்சம் மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்கள் எழுதினர். முன்னதாக தேர்வு எழுத மாணவர்களை தேர்வு மையங்களின் வளாகங்கள் முன்பு ஆஷா ஊழியர்கள் சமூக இடைவெளிவிட்டு நீண்ட வரிசையில் நிற்க வைத்தனர். பின்னர் மாணவர்களுக்கு உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. இதன்பின்னர் மாணவர்களுக்கு சானிடைசர் திரவம், முகக்கவசம் அளிக்கப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

அதைத்தொடர்ந்து மாணவர்கள் தேர்வு அறைகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஒரு அறையில் 12 மாணவர்கள் மட்டுமே அமர்ந்து தேர்வு எழுதவும் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் தடுக்க தேர்வு மையங்களை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. போலீசாரும் பாதுகாப்பும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் பெங்களூருவில் சில பள்ளிகளில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு அறைகளில் மந்திரி சுரேஷ்குமார் மாணவர்கள் தேர்வு எழுதுவதை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

ஆகஸ்டில் துணை தேர்வு

கர்நாடகத்தில் இன்று (நேற்று) எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கி உள்ளது. இந்த தேர்வை மாணவர்கள் ஆர்வத்துடன் வந்து எழுதி உள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. மாநிலத்தில் அனைத்து மையங்களிலும் தேர்வுக்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டு உள்ளது. மழையால் மாணவர்கள் தேர்வு எழுத வருவதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

இந்த தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு ஆகஸ்டு மாதத்தில் துணை தேர்வு நடத்தப்படும். இதனால் மாணவர்கள் கவலைப்பட தேவை இல்லை.
கர்நாடகத்தில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நிறைவடைந்த பிறகு பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பீதிக்கு மத்தியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று (நேற்று) தொடங்கியது. முதல் நாளில் இந்த தேர்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. எந்த தேர்வு மையங்களிலும் குழப்பம் ஏற்படவில்லை. தேர்வு அறைகளில் அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன. சுமார் 9 ஆயிரம் மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு தாலுகாவில் உள்ள தொக்கொட்டு கிராமத்தில் தனியார் பள்ளி தேர்வு மையத்தில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தேர்வு எழுத இருந்த 36 மாணவர்கள் வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர். யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாநிலத்தின் எல்லையில் உள்ள மாநிலங்களில் இருந்து 770 மாணவர்கள் வந்து தேர்வு எழுதினர். கோலாரில் போலீஸ் துறையில் காவலராக பணியாற்றி வரும் 55 வயது நபர் தேர்வு எழுதினார். தனிதேர்வராக ஆஜரானார். தேர்வு பணியில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 469 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். 
இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா பாதித்த 34 பேரும் தனி அறைகளில் தேர்வு எழுதினர்
கர்நாடகத்தில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. இருமல், சளி, காய்ச்சல் தொல்லையால் அவதிப்படும் மாணவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக ஒவ்வொரு மையத்திலும் 2 தனி அறைகள் அமைக்கப்பட்டு இருந்தன. 

இந்த நிலையில் நேற்று தேர்வு எழுதிய 34 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இதனால் அவர்கள் தனி அறைகளில் அமர்ந்து தேர்வை எழுதிவிட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story