கர்நாடக மூத்த மந்திரிகளின் பதவி பறிக்கப்படுகிறது; எடியூரப்பாவும் ராஜினாமா செய்கிறார்?


முதல்-மந்திரி எடியூரப்பா.
x
முதல்-மந்திரி எடியூரப்பா.
தினத்தந்தி 20 July 2021 3:00 AM IST (Updated: 20 July 2021 3:00 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மூத்த மந்திரிகளின் பதவி பறிக்கப்படுகிறது. முதல்-மந்திரி எடியூரப்பாவும் ராஜினாமா செய்கிறார் என்று பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் பேசியதாக ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு: கர்நாடக மூத்த மந்திரிகளின் பதவி பறிக்கப்படுகிறது. முதல்-மந்திரி எடியூரப்பாவும் ராஜினாமா செய்கிறார் என்று பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் பேசியதாக ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடியூரப்பா டெல்லி பயணம்

கர்நாடக முதல்-மந்திரியாக எடியூரப்பா இருந்து வருகிறார். பா.ஜனதா கட்சியை சேர்ந்த இவருக்கு 79 வயதாகிறது. பா.ஜனதாவில் வயதானவர்களுக்கு முதல்-மந்திரி உள்ளிட்ட பதவிகள் வழங்கப்படுவதில்லை. தென்மாநிலமான கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வர எடியூரப்பா காரணமாக இருந்தார். இதனால் அவருக்கு முதல்-மந்திரி பதவியை கட்சி மேலிடம் வழங்கியது. இருப்பினும் அவரை மாற்றிவிட்டு அடுத்த சட்டசபை தேர்தலில் புதியவரை களமிறக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. 

இதற்கிடையே எடியூரப்பாவை மாற்றும்படி பா.ஜனதாவை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி வந்தனர். இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா கடந்த 16-ந் தேதி கட்சி மேலிடம் அழைப்பின் பேரில் டெல்லி சென்றார். 

பதவி விலக வலியுறுத்தல்

அங்கு பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது முக்கியமாக, அவர்கள் மூன்று பேருமே, முதல்-மந்திரி பதவியை விட்டு விலகுமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆகஸ்டு மாதம் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் பதவி விலகல் தகவலை எடியூரப்பா திட்டவட்டமாக மறுத்தார்.

ஆயினும் எடியூரப்பா ராஜினாமா குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கட்சி நிர்வாகி ஒருவருடன் செல்போனில் பேசிய உரையாடல் பதிவு (ஆடியோ) வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடியூரப்பா பதவி விலகுகிறார்

அந்த ஆடியோ உரையாடலில், "முதல்-மந்திரி எடியூரப்பா பதவி விலகுகிறார். டெல்லியில் இருப்பவர் (அதாவது மறைமுகமாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியை குறிப்பிட்டார்.) புதிய முதல்-மந்திரி ஆகிறார். 
மூத்த மந்திரிகளான ஈசுவரப்பா, ஜெகதீஷ்ஷெட்டர் ஆகியோரின் காலமும் முடிவுக்கு வருகிறது. இதை யாரிடமும் கூற வேண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

துளு மொழியில் இடம் பெற்றுள்ள இந்த உரையாடல் பதிவு சமூக ஊடகங்களில் தீவிரமாக பரவியது. அனைத்து கன்னட செய்தி தொலைக்காட்சி ஊடகங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டன.
பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீலின் குரல் அடங்கிய இந்த உரையாடல் பதிவு, கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை நடத்த வேண்டும்

ஆனால் இந்த ஆடியோ பதிவில் உள்ள குரல் தன்னுடையது அல்ல என்று கூறி நளின்குமார் கட்டீல் மறுத்துள்ளார். இதுகுறித்து மங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், " முதல்-மந்திரி மாற்றம் தொடர்பாக வெளியான ஆடியோவுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது எனது குரல் இல்லை. 

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். முதல்-மந்திரியிடம் புகார் அளிக்க உள்ளேன்" என்றார். அதே வேளையில் நேற்று டெல்லி செல்ல திட்டமிட்டிருந்த நளின்குமார் கட்டீல் பயணத்தை திடீரென ரத்து செய்தார். இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பதிலளிக்க மறுத்துவிட்டார்.

துணை முதல்-மந்திரி பதவி

இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் வருகிற 22-ந் தேதி மந்திரிசபை கூட்டத்தை எடியூரப்பா கூட்டியுள்ளார். தற்போது கன்னட ஆடி மாதம் என்பதால், இந்த மாதத்தில் நல்ல காரியங்கள் எதுவும் கன்னட மக்கள் செய்ய மாட்டார்கள். அதனால் இந்த ஆடி மாதம் நிறைவடைந்ததும், எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவி விலகும் எடியூரப்பாவுக்கு ஏதாவது ஒரு மாநிலத்தின் கவர்னர் பதவி வழங்க பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டுள்ளது. மேலும் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கி அவரை சமாதானம் செய்யவும் மேலிட தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மடாதிபதிகள் போர்க்கொடி

ஆனால் லிங்காயத் சமூகத்தை சேர்ந்த மடாதிபதிகள் சிலர், எடியூரப்பாைவ முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கக்கூடாது என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும் எடியூரப்பா தனது நெருங்கிய மந்திரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Next Story