உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்-சேலத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று சேலத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சேலம்:
உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று சேலத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
ஆடிட்டர் ரமேஷ் நினைவு தினம்
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சேலத்தை சேர்ந்த ஆடிட்டர் ரமேசின் 8-ம் ஆண்டு நினைவு தினம் சேலம் மரவனேரி சாலையில் நேற்று காலை அனுசரிக்கப்பட்டது. இதில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு ஆடிட்டர் ரமேசின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, பொதுச்செயலாளர் செல்வராஜ், மாவட்ட முன்னாள் தலைவர் கோபிநாத், சேலம் மாநகர் மாவட்ட பார்வையாளர் அண்ணாதுரை, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் அருள் எம்.எல்.ஏ. மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணி
ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டு 8 ஆண்டுகளாகியும் குற்றவாளிகளுக்கு இந்த வழக்கில் இன்னமும் தண்டனை வழங்கப்படவில்லை. தேசிய குற்றப்புலனாய்வு மூலம் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தாலும், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று ஒரு தடை வாங்கி உள்ளனர்.
டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பாக இந்தியா முழுவதும் 135 கோடி கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி மருந்துகள் வழங்க மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துவோம்.
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. உடன் கூட்டணி தொடரும். இதில் எந்த குழப்பமும் கிடையாது. அந்த கட்சியில் உள்ள சிலர் பல்வேறு கருத்துகள் கூறினாலும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் எங்களுக்கு சுமுக உடன்பாடு உள்ளது. வருகின்ற காலம் பா.ஜனதா காலம் ஆகும்.
மேகதாது அணை
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை கொண்டு வரமாட்டோம் என்றனர். ஆனால் தற்போது நீட் தேர்வு குறித்து மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். கொரோனாவின் 3-வது அலை வந்தால் நீட் தேர்வு நடத்தலாமா? என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் கலந்து ஆலோசித்து முடிவு செய்யும்.
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக்கூடாது என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. அணை கட்டப்பட்டால் மழை இல்லாத போது தமிழகத்துக்கு கஷ்டம் ஏற்படும். அண்டை மாநிலத்தில் பா.ஜனதா முதல்-மந்திரி கூறினாலும், தமிழகத்தை பாதிக்கும் திட்டங்களை நாங்கள் எதிர்ப்போம். பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.
ரத்ததான முகாம்
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலையை ரூ.5 குறைப்பதாக கூறி இருந்தனர். இது அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். ஆனால் இதுவரை பெட்ரோல் விலையை குறைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அண்ணாமலை, ஆடிட்டர் ரமேஷ் வீட்டுக்கு சென்று அவருடைய குடும்பத்தினரை சந்தித்து பேசினார். மேலும் அவர் ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.
Related Tags :
Next Story