கள்ளக்காதலி வீட்டில் வக்கீல் வெட்டிக்கொலை தடுத்த காதலிக்கும் சரமாரி வெட்டு


கள்ளக்காதலி வீட்டில் வக்கீல் வெட்டிக்கொலை தடுத்த காதலிக்கும் சரமாரி வெட்டு
x
தினத்தந்தி 20 July 2021 4:44 AM IST (Updated: 20 July 2021 4:44 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதல் தகராறில் வக்கீல் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தடுத்த கள்ளக்காதலிக்கும் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக கள்ளக்காதலியின் பெற்றோர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை மதுரவாயல் பி.டி.ஐ.நகர், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 36). இவருடைய மனைவி சத்யா (30). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

சத்யா, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். அப்போது திருவள்ளூர் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரியும் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் வெள்ளேரித்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு வெங்கடேசன் (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் வழக்கு சம்பந்தமாக அடிக்கடி நேரில் சந்தித்து பேசி வந்தனர். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

தனிக்குடித்தனம்

இதையறிந்த சத்யாவின் பெற்றோர், வக்கீலுடனான கள்ளக்காதலை கைவிடும்படி அவரை கண்டித்தனர். ஆனால் அதற்கு மறுத்து சத்யா, கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனியாக தங்கினார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சத்யாவை சந்திக்க அவரது வீட்டுக்கு வக்கீல் வெங்கடேசன் வந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் சத்யாவின் தந்தை சங்கர் (54), தாய் சென்னம்மாள் (47), தங்கை சங்கீதா (27), தம்பி வினோத்குமார் (26), சங்கீதாவின் கணவர் வெங்கடேஷ் (30), சித்தி தேவி (38) ஆகியோர் சத்யாவின் வீட்டுக்கு நள்ளிரவு 12 மணியளவில் வந்தனர்.

வக்கீல் வெங்கடேசனும், சத்யாவும் ஒரே வீட்டில் தனியாக இருப்பதை கண்டு ஆத்திரம் அடைந்தனர். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

வெட்டிக்கொலை

இதில் ஆத்திரமடைந்த சத்யாவின் தாய், தந்தை உள்பட 6 பேரும் வக்கீல் வெங்கடேசனை, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டினார்கள். இதில், பலத்த வெட்டுக்காயமடைந்த வக்கீல் வெங்கடேசன், ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதனை தடுக்க முயன்ற சத்யாவையும் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதனால் இருவரும் இறந்துவிட்டதாக கருதி 6 பேரும் வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.

மயக்கம் தெளிந்து எழுந்த சத்யா, அலறினார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குவந்த போலீசார், வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடிய சத்யாவை திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

6 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யாவின் தந்தை சங்கர், அவரது தாயார் சென்னம்மாள், தம்பி வினோத்குமார், தங்கை சங்கீதா, அவருடைய கணவர் வெங்கடேஷ், சித்தி தேவி ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொலையான வக்கீல் வெங்கடேசனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இதற்கிடையில் நேற்று காலை வக்கீல் வெங்கடேசன் கொலையை கண்டித்து திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story