போலீசாரை மிரட்டும் வகையில் ஆடியோ வெளியீடு: உண்மை குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் குரல் கொடுத்து விட்டேன்


போலீசாரை மிரட்டும் வகையில் ஆடியோ வெளியீடு: உண்மை குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் குரல் கொடுத்து விட்டேன்
x
தினத்தந்தி 20 July 2021 4:46 AM IST (Updated: 20 July 2021 4:46 AM IST)
t-max-icont-min-icon

போலீசாரை மிரட்டும் வகையில் ஆடியோ வெளியிட்டதாக கைதான பிரபல ரவுடி கோழி அருள், கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் இதுபோல் குரல் கொடுத்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திரு.வி.க. நகர்,

தென்காசி மாவட்டம் சுரண்டை வேதக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோழி அருள் என்ற அருள்ராஜ் (வயது 47). பிரபல ரவுடி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் தாழையூத்தில் கண்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ‘வாட்ஸ்அப்’ மூலம் பரபரப்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் டி.ஜி.பி.க்கு சவால் விடும் வகையில் பேசி இருந்தார்.

மேலும் அந்த ஆடியோவில் அவர், “கொலை வழக்கில் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும். கோழி அருளுக்கு ஒரே போர்ஸ்தான். ஒன்மி ஆர்மி நான். அதற்கான ஆயுதம் கியாஸ் டேங்கர் லாரி, ஆசிட் லாரி. நான் செத்தாலும் கவலைப்பட மாட்டேன். டேங்கர் லாரியோடு 500 பேரை கொன்றுவிட்டுதான் சாவேன்” என்பது போல் போலீசாரை மிரட்டும் வகையில் பேசி இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

இதையடுத்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான தனிப்படையினர், சென்னை அம்பத்தூரில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த கோழி அருளை அம்பத்தூர் போலீசாருடன் இணைந்து கைது செய்தனர்.

போலீசாரிடம் கோழி அருள் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

திருந்தி வாழ்கிறேன்

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள எனது அண்ணனின் கோழி கடையில் வேலை செய்து வந்தேன். அதனால் நான், கோழி அருள் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டேன். 9-ம் வகுப்பு வரை படித்த எனக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.

என் மீது 7 கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி வழக்குகள் இருந்தன. அதில் 6 கொலை வழக்கில் கோர்ட்டு மூலம் நிரபராதி என அறிவிக்கப்பட்ட நான், மீதி உள்ள வழக்குகளை கோர்ட்டு மூலம் முறையாக சந்தித்து வந்தேன்.

தற்போது திருந்தி வாழ்ந்து வரும் நான், எதிரிகள் என்னை கொலை செய்யும் நோக்கத்தில் இருப்பதை அறிந்து, எனது குடும்பத்தை பிரிந்து ஆந்திராவில் லாரி ஓட்டி வருகிறேன். அதில் வரும் வருமானத்தை எனது குடும்பத்துக்கு அனுப்பி வருகிறேன்.

உண்மை குற்றவாளிகளை...

தாழையூத்து பகுதியை சேர்ந்த கண்ணன் கொலை வழக்கில் குற்றவாளிகள் கோர்ட்டில் சரணடைந்தனர். ஆனால் அவர்கள் போலியானவர்கள் என்பதை அறிந்த நான், இந்த கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் போலீசாரை மிரட்டும் வகையில் ஆடியோ வெளியிட்டேன்.

வேறு எந்த உள்நோக்கமும் இல்லாமல் கோபத்தில் குரல் கொடுத்து விட்டேன். அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் கைதான கோழி அருள், செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story