சேலம் தெற்கு தாலுகா அலுவலகத்தில் ஊழியர்கள் திடீர் தர்ணா போராட்டம்-தாசில்தாரை இடமாற்றம் செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு


சேலம் தெற்கு தாலுகா அலுவலகத்தில் ஊழியர்கள் திடீர் தர்ணா போராட்டம்-தாசில்தாரை இடமாற்றம் செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 July 2021 7:48 PM IST (Updated: 20 July 2021 7:48 PM IST)
t-max-icont-min-icon

சேலம் தெற்கு தாலுகா அலுவலகத்தில் ஊழியர்கள் திடீரென தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது தாசில்தாரை இடமாற்றம் செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்:
சேலம் தெற்கு தாலுகா அலுவலகத்தில் ஊழியர்கள் திடீரென தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது தாசில்தாரை  இடமாற்றம் செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஊழியர்கள் போராட்டம்
சேலம் மணியனூரில் தெற்கு தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலையில் ஊழியர்கள் பணிக்கு வந்தனர். காலை 10.30 மணி அளவில் பணிகளை புறக்கணித்த அவர்கள், தாலுகா அலுவலக வாசலில் திரண்டனர். திடீரென வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் வருவாய்த்துறை சங்க செயலாளர் அர்த்தனாரி தலைமையில் நடந்தது. அப்போது தாசில்தாரை இடமாற்றம் செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
உதவி கலெக்டர் பேச்சுவார்த்தை
போராட்டம் குறித்து தகவல் அறிந்த சேலம் உதவி கலெக்டர் விஷ்ணு வர்த்தினி தாலுகா அலுவலகத்துக்கு விரைந்து வந்தார். அங்கு போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக என்னுடைய கவனத்துக்கு ஏன் கொண்டு வரவில்லை. இதுதொடர்பாக பேசி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றதுடன் மீண்டும் பணிக்கு திரும்பினர். தாலுகா அலுவலகத்தில் நடந்த இந்த திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
தொந்தரவு
இதுகுறித்து வருவாய்த்துறை ஊழியர் சங்க செயலாளர் அர்த்தனாரி கூறுகையில், கொரோனா காலக்கட்டத்திலும் வருவாய்த்துறை ஊழியர்கள் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் தாசில்தார், ஊழியர்களின் மனம் வருத்தப்படும்படி பேசி வருகிறார். தேவை இல்லாமல் ஊழியர்களை தொந்தரவு செய்கிறார். இதனால் மிகுந்த உளைச்சலில் எங்களால் பணியாற்ற முடியவில்லை. எனவே தாசில்தாரை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
இந்த போராட்டம் குறித்து தாசில்தார் சீனிவாசன் கூறுகையில், ஊழியர் ஒருவரது சர்வீஸ் புத்தகம் தொடர்பான ஆவணங்களை சரிபார்த்த போது அதில் சில தவறுகள் இருந்தன. அதனை நன்றாக விவரம் தெரிந்த கிராம நிர்வாக அலுவலர் ஒருவரிடம் கொடுத்து சரி செய்து தருமாறு தெரிவித்தேன். இது அவர்களுக்கு அவமானமாகி விட்டதாக கூறி தகராறில் ஈடுபட்டதுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

Next Story