புதிதாக கட்டப்பட்டு வரும் தீயணைப்பு நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்


புதிதாக கட்டப்பட்டு வரும் தீயணைப்பு நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 20 July 2021 10:47 PM IST (Updated: 20 July 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் தீயணைப்பு நிலைய பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்:
திருவாரூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் தீயணைப்பு நிலைய பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அலுவலகம் இடம் மாற்றம் 
திருவாரூர் கமலாலயம் குளத்தின் தென்கரை பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் குதிரை லாயமாக பயன்படுத்தப்பட்ட ஒரு கட்டிடத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை நிலையம் கடந்த 1946-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. பழமை வாய்ந்த ரெயில்வே ஒட்டினால் வேயப்பட்ட கட்டிடம் என்பதால் மேற்கூரை முற்றிலும் பழுதடைந்துள்ளது. இதனால் மழை காலங்களில் கட்டிடம் ஒழுகின்ற நிலை ஏற்பட்டது.
இதனால் மேற்கூரையில் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டு பயன் அளிக்காததால் இந்த அலுவலகம் அருகில் எதிரில் சிமெண்டு கூரை கட்டிடத்திற்கு அலுவலகம் இடம் மாற்றம் செய்யப்பட்டது. இந்த தீயணைப்பு நிலையத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இடம் தேர்வு செய்யப்படாததால் பல்வேறு காரணங்களாக மாவட்ட தலைநகரில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
புதிய கட்டிடம் கட்ட பணிகள்
கடந்த 2017-ம் ஆண்டு பொபய்த கனமழையால் கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீயணைப்பு நிலைய கட்டிடத்தை ஆய்வு செய்தனர். அப்போது தீயணைப்பு நிலையமாக இயங்குவதற்கு இந்த கட்டிடத்தில் எந்தவித அடிப்படை வசதிகள் இல்லை எனவும், அலுவலக பயன்பாட்டிற்கு தகுதி வாய்ந்த கட்டிடமாகவும் இல்லை எனவும் அறிக்கையை அரசு அனுப்பி வைத்தது.
இந்தநிலையில் மீண்டும் திருவாரூர் தீயணைப்பு நிலையத்திற்கு சொந்தமாக புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது. இதற்காக ரூ.1 கோடியே 74 லட்சத்து 91 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தாலுகா போலீஸ் நிலையம் அருகில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
இந்த கட்டிடம் 2 தளங்களுடன், 3 வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதி என அனைத்து வசதிகளுடன் கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. புதிய தீயணைப்பு நிலைய கட்டிடத்தில் இருந்து திருவாரூர்-தஞ்சை பிரதான சாலை வருவதற்கான சாலை மிக குறுகலாக அமைந்துள்ளது. 
வேகத்தடை அமைக்க வேண்டும்
இந்த சாலையை அகலப்படுத்தினால் தான் அவசர காலங்களில் தீயணைப்பு வாகனமும் விரைவாக செல்வதற்கு வசதியாக இருக்கும். குறிப்பாக திருவாரூர்-தஞ்சை சாலையில் எந்தநேரமும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக இருந்து வருவதால் தீயணைப்பு நிலையம் செல்லும் இடம் அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
திருவாரூர் மாவட்ட தலைமையிடமாக இருப்பதால் குறைந்தபட்சமாக 3 தீயணைப்பு வாகனம் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும். குறிப்பாக தீயணைப்பு நிலையத்தில் 30 வீரர்கள் பணிபுரிய வேண்டிய நிலையில் 10 பேர் கூட இல்லாத நிலையில் இருந்து வருகிறது. இதனால் பணி சுமையில் தீயணைப்பு வீரர்கள் அவதியடைந்து வருகின்றனர். 
எனவே வாகன வசதி, தீயணைப்பு வீரர்கள் காலி பணிடங்களை நிரம்பிட வேண்டும். மேலும் மழை காலத்திற்கு முன்னதாக புதிய தீயணைப்பு நிலைய கட்டிட கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story